டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து ரூ. 19 கோடி தேர்தல் நிதி வசூலாகியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் முதன்முறையாக நன்கொடை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக கட்சியின் தேசிய செயலர் மற்றும் நிதி, நன்கொடைப் பிரிவு பொறுப்பாளருமான பங்கஜ்குப்தா கூறியதாவது:
இதுவரை 63 ஆயிரம் தனி நபர்களிடமிருந்து ரூ. 19 கோடி நன்கொடை வசூலாகியுள்ளது. ரூ. 10 முதல் லட்சக்கணக்கான ரூபாய் வரை நன்கொடையாக அளித்துள்ளனர்.
ரிக்ஷா தொழிலாளி, வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், சியாச்சின் பகுதியிலுள்ள இந்திய ராணுவ வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் டெல்லி தேர்தலை முன்னிட்டும் ஊழலற்ற நிர்வாகம் அமைப்பதற்காகவும் இத்தொகையை வழங்கியுள்ளனர்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ரூ.20 கோடி வசூலிப்பதே எங்கள் இலக்கு. அந்த இலக்கை விரைவில் எட்டுவோம். செப்டம்பர் மாத இறுதி வரை ரூ. 10 கோடி மட்டுமே வசூலாகியிருந்தது. இந்தியாவுக்குள் இருந்து ரூ.13.18 கோடி வசூலாகியுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஹாங்காங், கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சுமார் ரூ.6 கோடி வழங்கியுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்த அனைத்து நன்கொடை விவரங்களும், இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்ப
ட்டுள்ளன. அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் ரூ. 2 கோடியும், ஹாங்காங்கில் இருந்துரூ.1.14 கோடியும் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. அதை த்தொடர்ந்து சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டனில் இருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளது.
ஜெர்மனி, கத்தார், குவைத், நியூஸிலாந்து, நார்வே, நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்தும் நன்கொடைகள் பெறப்படுகின்றன.
நாங்கள் இந்தியர்களிடம் இருந்து மட்டுமே நன்கொடை பெறுகிறோம். வேறு யாரிடம் இருந்தும் பெறுவதில்லை. சில வெளிநாட்டவர்கள் நன்கொடை கொடுக்க விரும்பிய போது மறுத்து விட்டோம். எங்களைப் போலவே காங்கிரஸும் பாஜகவும் நன்கொடை பெறுவதை பகிரங்கமாக வெளியிட முடியுமா என்றார் அவர்.
கடந்த மாதம் தில்லி உயர்நீதிமன்றம், ஆம் ஆத்மி கட்சியின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து அதன் நிதி ஆதாரம் குறித்து அறியும்படி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.