இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இம்மாதத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய 6-வது தாக்குதல் இதுவாகும்.
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் இன்று (திங்கட்கிழமை) தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ராஜோரி மாவட்டத்திலுள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் இன்று காலை தானியங்கி இயந்திரங்கள், பீரங்கி குண்டுகளை கொண்டு அத்துமீறி தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி அளிக்கப்பட்டது" என்றார்
முன்னதாக கடந்த வருடத்தில் மட்டும் இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பொதுமக்களில் 16 பேர் பலியாகினர். 71 பேர் காயமடைந்தனர்.
கடந்த ஆண்டில் மட்டும் எல்லைப் பகுதியில் மட்டும் 253 அத்துமீறல் நிகழ்வுகள் நடந்துள்ளன. எல்லையில் நிகழும் அத்துமீறல் சம்பவங்களால் கிட்டதட்ட 8000 பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.