நிலச் சட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்த நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர்கள் புறக்கணிப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை - நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்கும் முயற்சியாக, பிரதமர் மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிதி ஆயோக் அமைப்பின் இந்த இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்வர்களும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி காங்கிரஸ் ஆளும் 9 மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதேபோல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அதேவேளையில், அவசர அரசு அலுவல்கள் காரணமாக இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், தமிழக அரசு தரப்பிலான கோரிக்கையை அச்சிட்டு அனுப்பியிருப்பதாகவும் பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
வழக்கமாக மத்திய அரசை வசைபாடும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அருண் ஜேட்லி, "பிரதமர் தலைமையிலான இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் 16 மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தை புறக்கணித்த மாநில முதல்வர்கள் தங்கள் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்துக்கு ஏற்புடையதா என்பதை சுய பரிசோதனை செய்வது நன்று.
கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு மாநில முதல்வர்களும், நிலச் சட்டத்தை அமல்படுத்த தாமதிப்பது வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாகும் என்றனர்.
சில மாநிலத்தின் முதல்வர்கள் நிலச்சட்டத்தில் ஒன்று மத்திய அரசு அனைவரும் ஏற்கும் வண்ணத்தில் ஒருமித்த முடிவை எட்ட வேண்டும். இல்லையேல் மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்ப சட்டத்தை அமைத்துக் கொள்ள உரிமை அளிக்க வேண்டும் என யோசனை கூறியுள்ளனர்" என்றார்.