வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஓரங்கட்டப்படவில்லை என்றும், அவர்கள் வழிகாட்டிகளாக அங்கம் வகிக்கிறார்கள் என்றும் பாஜக விளக்கம் அளித்துள்ளது.
பாஜகவில் இறுதி முடிவு எடுக்கும் உயர் அதிகார அமைப்பான ஆட்சிமன்றக் குழுவில் இருந்து மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நீக்கப்பட்டனர்.
பாஜகவின் இந்த மாற்றம், கட்சியில் நரேந்திர மோடியின் கை வலுபெற்றுள்ளதைக் காட்டுவதாகவும், குஜராத்தை சேர்ந்த இருவரிடம் மட்டுமே கட்சியின் அதிகாரம் மையப்படுத்தப்படுவதை உணர்த்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக புதன்கிழமை விளக்கம் அளித்த மத்தியப் பிரதேச முதல்வரும், பாஜகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவருமான சிவராஜ் சிங் சவுகான், "வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பாஜகவின் வழிகாட்டிகள். அவர்களால்தான் கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர்.
காலத்திற்கு ஏற்ப கட்சியில் சிறிது மாற்றம் தேவை என்ற நிலையில்தான் இந்த முடிவு, கட்சித் தலைமையால் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மூத்த தலைவர்களை சிறப்பிக்கும் வகையில், வழிகாட்டுக் குழு (மார்கதர்ஷக் மண்டல்) என்ற குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் வளர்ச்சிக்காக தங்களது வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்த தலைவர்கள் இனி இந்தக் குழுவில் இடம்பெற்றதன் மூலம் எங்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். அவர்களைப் பின்பற்றி கட்சியை நாங்கள் முன்னெடுத்து செல்வோம்" என்றார் அவர்.