பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க தமிழக அமைச்சர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் நேற்று பெங்களூரு வந்தனர். தனியார் விடுதியில் தங்கியிருந்த அமைச்சர்கள் கர்நாடக அதிமுகவினர் மூலமாக சசிகலாவை சந்திக்க சிறைத் துறையிடம் அனுமதி கேட்டனர். இதேபோல பெங்களூரு வந்த முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும் சசிகலாவை சந்திக்க அனுமதி கோரினர்.
இதுதொடர்பாக கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கூறிய போது, “சசிகலாவை நாள்தோறும் பார்வையாளர்கள் சந்திக்க அனுமதி அளிக்க முடியாது. உரிய ஆவணங்களுடன் வரும் உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும். சசிகலாவை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சந்திப்பதற்கு சிறைத் துறை டிஐஜி சத்தியநாராயண ராவிடம் அனுமதி பெற வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கர்நாடக அதிமுக நிர்வாகிகள், டிஐஜி சத்தியநாராயண ராவ், கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் உள்ளிட்டோருடன் பேசி அனுமதி பெற முயற்சித்தனர். ஆனால் இருவரும் இது தொடர்பாக பேசவில்லை என தெரிகிறது. இதனிடையே சசிகலா நேற்று முழுவதும் சிறையில் மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். எனவே அவரும் அமைச்சர்களை சந்திப்பதை தவிர்த்துள்ளதாக சிறைக்குள் இருக்கும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால் நாள் முழுவதும் பெங்களூருவில் காத்திருந்த அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்காமல் அதிருப்தியுடன் தமிழகம் திரும்பினர். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி ஆகியோரும் அனுமதி கிடைக்காததால் சென்னைக்கு திரும்பினர்.
முதல்வருக்கும் அனுமதி மறுப்பு?
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஆசி பெற முயற்சித்து வருகிறார். இதற்காக அனுமதி கோரி முறையாக கர்நாடக சிறைத் துறையில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறைத்துறை இன்னும் அனுமதி அளிக்காததால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவை சந்திக்க வராமல் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.