இந்தியா

ரூ.50 லட்சம் கேட்டு பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பிடிஐ

மும்பை பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட்டிடம் ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவரை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட். இவருடைய மகள் ஆலியா பட். தற்போது இந்தி திரைப் படங்களில் பிரபலமாக இருக் கிறார். இந்நிலையில், கடந்த மாதம் மகேஷ் பட்டிடம் தொலை பேசியில் பேசிய மர்ம நபர், ‘‘ரூ.50 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால், மகள் ஆலியா பட், மனைவியை கொலை செய்வேன்’’ என்று மிரட்டல் விடுத்தார். மேலும், வாட்ஸ்அப்பில் மிரட்டல் செய்தி அனுப்பினார்.

இதுகுறித்து மும்பை ஜூஹூ போலீஸ் நிலையத்தில் மகேஷ் பட் புகார் அளித்தார். அதன் அடிப் படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் தொலைபேசியில் மிரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து மும்பை குற்றப் பிரிவு டிசிபி வினய் ரத்தோட் நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘மகேஷ் பட்டுக்கு மிரட்டல் விடுத்த குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்து விட்டோம். உ.பி.யில் அவரை போலீஸார் பிடித்துள்ளனர். இதை யடுத்து உ.பி.க்கு விரைந்துள்ள போலீஸார் குற்றவாளியை காவலில் எடுத்து மும்பைக்கு அழைத்து வருகின்றனர்’’ என்றார்.

குற்றவாளி கைது செய்யப் பட்டது குறித்து மகேஷ் பட் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘மிரட்டல் தொலைபேசியால் என் குடும்பத்துக்கு இருந்த அச்சுறுத் தல் முளையிலேயே கிள்ளி எறியப் பட்டுள்ளது. அதற்காக மும்பை மற்றும் உ.பி. போலீஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT