நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை வெளிப்படுத்தும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருந்ததாக பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: “கடந்த 10 ஆண்டுகளாக பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் காங்கிரஸ் கூட்டணி அரசு செய்துள்ள சாதனைகளை மிகவும் சுருக்கமாக, தெளிவாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறிவிட்டார். இந்த சாதனைகளை நிகழ்த்தியது தொடர்பாக மத்திய அரசு பெருமிதம் கொள்கிறது.
நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை வெளிப்படுத்தும் வகையில் மிகவும் சமநிலையான பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்காக ப.சிதம்பரத்துக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் களுக்கு உதவும் வகையில் பட்ஜெட்டில் கல்விக் கடன், திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடர்பான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பை நமது படை வீரர்களும், ராணுவ அதிகாரிகளும் வரவேற்பார்கள் என நம்புகிறேன்” என்றார் பிரதமர்.
ஒரே பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும், வெவ்வேறு தேதிகளில் (கால கட்டங்களில்) ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் வேறுபாடு காணப்படுகிறது. இதில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து ஒரே பதவி, ஒரே (மாதிரியான) ஓய்வூதியம் (one rank – one pension) என்ற திட்டத்தை மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளது.