ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்) திட்டம் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்கது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது பட்ஜெட் உரையில், “பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த ராணுவ பென்ஷன் நிதிக்கு மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யும்” என அறிவித்தார்.
வரும் 2014-15 நிதியாண்டில் நடைமுறைக்கு வரும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 30 லட்சம் ராணுவ ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் ஒரே பதவி, ஒரே பணிக்காலம் கொண்ட ராணுவ வீரர்கள் அவர்களின் ஓய்வுபெற்ற நாள் வேறுபட்டிருந்தாலும் ஒரே அளவு பென்ஷன் பெறுவார்கள்.
இதுகுறித்து ராகுல் தனது இல்லத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் தொடர்பாக கடந்த சில நாள்களாக பலர் என்னை சந்தித்தனர்.
நாட்டுக்காகவும் மக்களுக் காகவும் நமது படைகள் எப்போதும் போரிடத் தயாராக உள்ளன. அவர்களுக்கு முழு ஆதரவு அளிப்பது நமது கடமை. வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த முடிவை எடுத்ததற்காக மத்திய அரசுக்கும், பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நமது அரசு எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும். அவர்கள் எப்போதும் நமது நாட்டுக்கு அரணாக இருப்பார்கள்” என்றார்.
ஹரியாணா, ராஜஸ்தான், இமாசலப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் சுமார் 1000 பேர் கடந்த வாரம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது இக்கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போது அவர்களிடம் பேசிய ராகுல், நான் உங்கள் பக்கம் இருக்கிறேன். உங்கள் கவலைகளை புரிந்துகொண்டுள்ளேன். நாட்டுக்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறீர்கள். உங்கள் கோரிக்கை நிறைவேற அனைத்து முயற்சியும் செய்வேன்” என்றார்.
எம்.பி.க்கள் வரவேற்பு
ராணுவத்தினருக்கான ஒரே பதவி ஒரே பென்ஷன் திட்டத்தை கட்சிப் பாகுபாடின்டி பல்வேறு எம்.பி.க்கள் வரவேற்றுள்ளனர்.பாதுகாப்பு துணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், “இது மிகவும் நேர்மையான கோரிக்கை. இது நிறைவேறியிருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
பாஜக எம்.பி. பி.ஜே.பாண்டா கூறுகையில், “இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். சுமார் 10 ஆண்டுகளாக இந்த கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது” என்றார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. ரகுவன்ஸ் பிரசாத் கூறுகையில், “இது ஒரு நீண்டகால கோரிக்கை. இதனை இப்போதாவது நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி” என்றார். ஐக்கிய ஜனதா தள தலைவர் கே.சி.தியாகி பட்ஜெட்டில் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டினாலும், ஒரே பதவி ஒரே பென்ஷன் திட்டத்தை எதிர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.
30 லட்சம் முன்னாள் வீரர்கள் பயன் பெறுவர்
ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
ராணுவத்தில் 1996-க்கு முன்பு ஒய்வு பெற்றவர்களுக்கு ஒரு வகையான ஓய்வூதியமும், 1996-2005 வரை மற்றும் 2006-2008 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு வெவ்வேறுவிதமாகவும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு கூடுதலாக ஓய்வூதியம் கிடைக்கிறது.
இந்த முரண்பாண்டைக் களையும்வகையில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். அதனை மத்திய அரசு இப்போது முன்வந்துள்ளது.
இதற்காக பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2014-15-ம் நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் சுமார் 30 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் அடைவார்கள்.