ஆந்திர மாநிலம் மஹபூப்நகரில் இன்று அதிகாலையில் தனியார் ஆம்னி பேருந்தில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து உடனடியாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறையினருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் முதல்வர் கிரண்குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளதோடு காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ பிடித்தது. இதில் 44 பேர் உடல் கருகி பலியாகினர்.
பேருந்து விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என மாநில போக்குவரத்து துறை அமைச்சர் போட்ஸா சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, டி.ஆர்.எஸ். தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர்,44 உயிர்களை பலி வாங்கிய பேருந்து விபத்து குறித்து தாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.