அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் பதவியில் அமர்த்தப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் 11 பேர் நேற்று புகார் அளித்தனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த 5-ம் தேதி அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில் சசிகலா சிறை தண்டனை பெற்றதால் அவரது அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நேற்று புதிய அரசு பொறுப்பேற்றது.
பன்னீர்செல்வத்தை 12 எம்.பி.க்கள் மற்றும் 9 எம்எல்ஏக் கள் ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி. டாக்டர் வி.மைத்ரேயன் தலைமையில் நேற்று டெல்லி வந்த எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் அளிக்கப்பட்ட புகாரில், “கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதும், துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டதும் செல்லாது. அதிமுகவில் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவி என்பது இல்லை. சசிகலாவுக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருப்பதும் கட்சிக்கு விரோதமானது” என்று கூறி யுள்ளனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, “அதிமுக எம்.பி.க் கள் தங்கள் புகாருடன் கட்சியின் சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகள் விவரங்களையும் அளித்துள்ளனர். இத்துடன், ஏற்கெனவே மதுசூதனன் அளித்த புகாருக்கும் பதில் கேட்டு அதிமுகவுக்கு மற்றொரு கடிதம் அனுப்பப்படும். அதன் பிறகே அந்த இருவரின் பதவிகளை அங்கீகரிப்பது குறித்து ஆணையம் முடிவு செய்யும். இது நீண்ட நடைமுறையை கொண்டது என்பதால் அதில் முடிவு எடுக்க காலதாமதம் ஆகும். தற்போது எடப்பாடி பழனிசாமியை முதல்வராக பதவியேற்கும்படி ஆளுநர் அழைத்த முடிவில் ஆணையம் தலையிடாது” என்றனர்.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக அதிருப்தி எம்.பி. சசிகலா புஷ்பா ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். இதற்கு விளக்கம் கேட்டு ஆணையம் சார்பில் அதிமுகவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில் மேலும் இரு புகார்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்கவுள்ளது.
வி.மைத்ரேயன் தலைமையில் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க் கள் மற்றும் 2 வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்துக்கு சென்றனர். வழக்கமாக தமிழக அரசியல் கட்சிகள் ஆணையம் வரும்போது, செய்தி சேகரிக்க தமிழகத்தின் டெல்லி பத்திரிகை யாளர்கள் மட்டுமே வருவது வழக்கம். ஆனால் நேற்று முதல் முறையாக ஆங்கிலம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளின் பத்திரிகையாளர்களும் எம்.பி.க் களுக்காகக் காத்திருந்தனர். செய்தி சேனல்களின் நேரடி ஒளிபரப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் தேர்தல் ஆணைய அலுவலகம் அமைந்துள்ள அசோகா சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஆனால் வெளியே வந்த எம்.பி.க்கள் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் காரி ஏறிப் புறப்பட்டனர். இதனால் அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை தேசிய பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்களிடம் முறையிடும் நல்வாய்ப்பு நழுவ விடப்பட்டதாகக் கருதப்படுகிறது.