இந்தியா

மத்தியப் பிரதேசம் கூட்ட நெரிசல்: பலி 115 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் உள்ள ரத்னாகர் கோயிலில் நேற்று (அக்.,13ம் தேதி) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 115ஆக அதிகரித்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவராத்திரியையொட்டி நடந்த கோயில் விழாவில் பங்கேற்பதற்கு ஆயிரக்கணக்கானோர் கூடினர். காலை 9-ல் இருந்து 10 மணி வரை, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தபோது, இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிந்து நதியின் மேல் உள்ள பாலத்தில் சுமார் 25,000 பேர் இருந்தபோது, இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்டவுடன், உடனடியாக பாதுகாப்பு படையினரை ஒன்றுதிரட்டி மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாமல் போய்விட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னர், தகவல் அறிந்து 3 கம்பெனி போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

பாலம் இடிந்து விழுவதாக வதந்தி பரவியைத் தொடர்ந்தே கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று மாவட்ட நிர்வாகிகள் கூறினர்.

அதேநேரத்தில், காவலர்கள் போலீஸ் தடியடி மேற்கொண்டதால்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்ற குற்றச்சாட்டை போலீஸ் தரப்பு மறுத்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் இதுவரை,ஏறத்தாழ 115 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1.5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் நிவாரணமாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் செளஹான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு தார்மீக பொறுபேற்று, முதல்வர் செளஹான் மற்றும் சுகாதார அமைச்சர் மிஸ்ரா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2006-ல் தீபாவளிக்கு மறுநாள், இதே இடத்தில் 57 பக்தர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT