அன்னை தெரசாவுக்கு இன்று வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. போப் பிரான் சிஸ் முறைப்படி அதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார். இதை முன்னிட்டு ரோம் நகரில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
அல்பேனியாவில் கடந்த 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி பிறந்தவர் அன்னை தெரசா. இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இளம் வயதிலேயே கத்தோலிக்க மதத் தில் துறவறம் மேற்கொண்டார். பின்னர் இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு சேவை செய்ய வந்தார். இங்கு ‘மிஷனரிஸ் ஆப் சேரிட்டி’ என்ற கத்தோலிக்க சபையை நிறுவினார். பின்னர் இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கினார்.
நோபல், பாரத ரத்னா
வாழ்நாள் முழுவதும் ஏழைகள், தொழு நோயாளிகள், காசநோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக சேவை செய்தார். இவரது சேவையை கவுரவிக்கும் வகையில் கடந்த 1979-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங் கப்பட்டது. அதேபோல் இந்தியா வின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் கடந்த 1980-ம் ஆண்டு அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி அன்னை தெரசா காலமானார்.
அவரது மறைவுக்கு பிறகு அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். அதை வாடிகன் தொடர்ந்து பரிசீலித்து வந்தது. ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டுமானால், அவர் இறந்த பின்னர் 2 அற்புதங்களை நிகழ்த்தி காட்டி இருக்க வேண்டும் என்று கத்தோலிக்க மதத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அன்னை தெரசாவை தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்ததால், தங்கள் நோய் முற்றிலும் குணமடைந்ததாக 2 பேர் கூறினர். அவர்களுடைய தகவல்களை ஆராய்ந்த பின் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் வாடிகனில் போப் பிரான்சிஸ் அறிவித்தார்.
சுஷ்மா பயணம்
அதன்படி, தெரசாவுக்கு வாடிகன் நகரில் இன்று நடக்கும் பிரம்மாண்ட விழாவில் புனிதர் பட்டத்தை, போப் பிரான்சிஸ் அறிவிக்கிறார். இந்நிகழ்ச்சியில் தெரசாவின் ஆதரவாளர்கள் லட்சக்கணக்கில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் சார்பில் வெளியு றவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் 12 பேர் குழுவினர் வாடிகன் செல்கின்றனர். அத்துடன் டெல்லி அரசு சார்பில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஒரு குழுவும், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு குழுவும் வாடிகன் செல்கின்றன.
அன்னை தெரசா கொல்கத் தாவில் நிறுவிய, ‘மிஷனரிஸ் ஆப் சேரிட்டி’யின் தற்போதைய சுப்பீரியர் ஜெனரல் சகோதரி மேரி பிரேமா தலைமையில் இந்தியா வின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50 சகோதரிகள் வாடிகனில் நடக் கும் விழாவில் பங்கேற்கின்றனர். தவிர கொல்கத்தா ஆர்ச் பிஷப் தாமஸ் டிசோசா, இந்தியா முழுவதும் உள்ள 45 பிஷப்புகள் ஆகியோர் ஏற்கெனவே வாடிகன் சென்றுவிட்டனர்.
அன்னை தெரசாவுக்கு இன்று புனிதர் பட்டம் வழங்கப்படு வதால், கொல்கத்தாவில் உள்ள மிஷனரிஸ் ஆப் சேரிட்டி மற்றும் பல இடங்களில் சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.