இந்தியா

5 மாநில சட்டப்பேரவை தேர்தலால் ராகுலின் சீனப் பயணம் ஒத்திவைப்பு

ஆர்.ஷபிமுன்னா

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது சீனப் பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி (சிபிசி) பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக ராகுல் தலைமையில் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு ஜனவரி 15 சீனா செல்லவிருந்தது. இக்குழுவில் காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஜோதிராதித்ய சிந்தியா, குமாரி ஷெல்ஜா, ராஜீவ் சத்தவ், சுஷ்மிதா தேவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் பிப்ரவரி 4 முதல் நடைபெறும் 5 மாநில தேர்தல் காரணமாக இக்குழுவின் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம்கூறும்போது, “சீனப் பயணம் தொடர்பான முடிவு, சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன் எடுக்கப்பட்டது. தற்போது சீனா சென்றால் இங்கு தேர்தல் பணிகள்பாதிக்கப்படும். எனவே பயண தேதியை ஒத்தி வைப்பதாக, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கடிதம் எழுதியுள்ளார். உ.பி.யில் தேர்தல் கூட்டணிதொடர்பாகவும், 5 மாநில வேட்பாளர்கள் குறித்தும் முடிவு எடுப்பதற்கு ராகுல்ஜி இங்கு இருப்பது அவசியம்” என்று தெரிவித்தனர்.

இதற்கு முன் சீனாவில் கடந்த 2007-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி – காங்கிரஸ் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் குழு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ராகுலை தலைவராக்க முயற்சி?

கடந்த சிலமாதங்களாக காங்கிரஸ் கூட்டங்கள் மற்றும் முக்கிய முடிவுகளை தனது மகன் ராகுல் காந்தி வசமே விட்டுவிடுகிறார் சோனியா காந்தி.

கடைசியாக நவம்பர் 7-ல் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்கு சோனியா வரவில்லை. இதை ராகுல்தலைமையேற்று நடத்தினார். இதையடுத்து பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக ‘ஜன் வேத்னா சம்மேளனம்’ என்ற பெயரில் நடந்த கூட்டத்துக்கும் சோனியா வராமல்ராகுல் முன்னின்று நடத்தினார். ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக அமர்த்தும் முயற்சியே இது என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

SCROLL FOR NEXT