ஒரு நபர் தொடர்ச்சியாக 18 நாட்கள் பட்டினி கிடந்து, அவருடைய உடல் எடை 9 கிலோ சரிந்து, அவரது ரத்த அழுத்தம் 107/70 எனக் குறைந்து, ரத்த சர்க்கரை அளவு 67 என வீழும் என்றால், அவருக்கு உடனடி சிகிச்சை தேவை என்பது மருத்துவர்களின் உறுதியான பரிந்துரை.
ஆனால், இன்றுடன் 18-வது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை எட்டியுள்ள சோனம் வாங்சுக், “நான் வெளியே பலவீனமாக இருந்தாலும், உள்ளே பலமாக இருக்கிறேன்” என்று கூறியபடியே இன்னும் தனது போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார். அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படி பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்தப் பின்னணியில் சோனம் வாங்சுக் பற்றியும், அவருடைய போராட்டம் பற்றியும், உண்ணாவிரதம் என்ற சக்திவாய்ந்த அறப்போராட்டம் பற்றியும் பார்ப்போம்.
யார் இந்த சோனம் வாங்சுக்?
முதலில் யார் இந்த சோனம் வாங்சுக் என்பதிலிருந்து ஆரம்பிப்போம். 1966-ல் பிறந்த சோனம் வாங்சுக் ஒரு பொறியாளர். விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் வித்தகர். கல்வி சீர்திருத்தவாதி. சூழலியல் செயற்பாட்டாளர். கடந்த 2009-ம் ஆண்டு ஆமிர் கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் தான் இந்த சோனம் வாங்சுக்.
ஆனால், அது மட்டுமே அவருக்கான புகழ் அடையாளமில்லை. சோனம் வாங்சுக் லடாக்கில் கல்வி முறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த ‘மாணவர்களின் கல்வி மற்றும் கலாசார இயக்கம்’ (Students’ Educational and Cultural Movement - SECMOL) என்ற அமைப்பை தொடங்கினார். அந்தக் கல்வி முறை லடாக்கின் கலாசார, சுற்றுச்சூழல் தன்மைக்கு ஏற்றதாக இருக்கும் என்று அவர் குரல் கொடுத்து வந்தார். ஏட்டுக் கல்வியோடு நிறுத்தாமல் மாணவர்களுக்கு செயல்முறை கல்வி வழங்க வேண்டும் என்பதே அவரது இலக்கு.
1993 முதல் 2005 வரை வாங்சுக், ‘லடாக்ஸ் மெக்லாங்’ என்ற அச்சு இதழின் ஆசிரியராக இருந்தார். இவரது அறிவியல் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது, லடாக் மக்களுக்காக மைனஸ் 15 டிகிரி குளிரையும் தாக்குப்பிடிக்கும் வகையிலான களிமண் வீடுகளை உருவாக்கியது.
2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் இந்தியா மோதலில் ஈடுபட்டபோது, ‘எல்லையில் வீரர்கள் சண்டை போடட்டும். நாம் சீனப் பொருட்களை வாங்காமல் ‘வாலட் பவர்’ (Wallet Power) காட்டுவோம்’ என்று முழங்கியவர்.
2024 மார்ச் மாதம் வாங்சுக், லடாக் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து 2024 செப்டம்பரில் வாங்சுக், லே முதல் டெல்லி வரை டெல்லி சலோ பாதயாத்திரை என்ற பெயரில் மாநில அந்தஸ்துக்கான பாதயாத்திரையை மேற்கொண்டார். ஆனால், அவரை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி, தடுப்புக் காவலில் எடுத்தது காவல் துறை. அக்டோபர் 2, 2024-ல் அவர் விடுவிக்கப்பட்டார்.
அதன்பின்னர், லடாக் மாநில அந்தஸ்துக்கான அவரது குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. யூனியன் பிரதேசமாக இருப்பதால், அதற்கு போதிய சுயாதீன சக்திகள் இல்லை. லடாக் கலாசார, சூழலியல் அடையாளத்தை பாதுகாக்க வலுவான சட்டப்பேரவை வேண்டும். அதில், உள்ளூர்வாசிகளின் குரல்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று தொடர்ந்து முழங்கி வருகிறார் வாங்சுக். மேலும் 2025-ல் அவர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
உண்ணாவிரதப் போராட்டங்களும் இந்தியாவும்...
காந்தி தொடங்கி தற்போது சோனம் வாங்சுக் வரை பல்வேறு காலக்கட்டத்திலும், உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலம் இந்தியா உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
காந்தி தன் வாழ்நாளில் 17 முறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டார். 1918-ல் அகமதாபாத் ஆலை தொழிலாளர்களுக்காக அவர் மேற்கொண்டதே, இந்தியாவில் அவரது முதல் உண்ணாவிரதப் போராட்டம் என்று அறியப்படுகிறது. அதன் பின்னர் 1924, 1933, 1943 என மூன்று முறை அவர் தொடர்ச்சியாக 21 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டார்.
அடுத்ததாக, இந்தியாவின் ‘இரும்பு மனிதி’ என்றழைக்கப்படும் இரோம் ஷர்மிளா.
மணிப்பூரில் 2000-ம் ஆண்டில் போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
அதையடுத்து வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை நீக்கக் கோரி 16 வருடங்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர் இரோம் சர்மிளா. ஒரு கட்டத்தில் அவருக்கு வலுக்கட்டாயமாக ட்யூப் மூலம் உணவு செலுத்தப்பட்டது. இருந்தாலும் அதன் பின்னரும் வாய் வழியாக எதுவும் சாப்பிடாமல் இருந்தார். 2017-ம் ஆண்டு அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். விரல் நுணியில் ஒரு துளி தேனை எடுத்து அவர் நாவில் வைத்த புகைப்படம் உலகம் முழுவதும் பேசுபொருளானது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களை அமல்படுத்தக் கோரி பல கட்டங்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியுள்ளார். 2011 ஆகஸ்டில் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இவர் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
லோக்பால் நியமனம் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளை வலியுறுத்தி, 2018 மார்ச் மாதம் மீண்டும் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
அறவழிப் போராட்டங்கள் பல இருந்தாலும் அடையாள உண்ணாவிரதம் தொடங்கி சாகும்வரை உண்ணாவிரதம் வரை இன்றும் பின்பற்றப்படக் காரணம், வேறு எந்த போராட்டத்தைப் போலவும் இந்தப் போராட்டத்தில் குரல் எழுப்ப வேண்டாம், பதாகை ஏந்த வேண்டாம், ஏன் கூட்டம் கூட சேர்க்க வேண்டாம். கோரிக்கை என்னவோ அதைத் தெரிவித்துவிட்டு ஒருவரோ அல்லது பலரோ மனிதனின் அடிப்படை உணர்வான பசியை அடக்குவது என்பதே கவனத்துக்குரியது தான்.
ஜந்தர் மந்தரின் கள நிலவரம்...
இப்போது நாம் டெல்லி ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக் மேற்கொள்ளும் போராட்டத்துக்கு வருவோம். போராட்டக் களத்தில் அவர் பின்னால் இருப்பது ஒற்றைக் கோரிக்கை தான் ‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்’.
சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டங்கள் மேற்கொள்வது புதிதல்ல. இப்போதையப் போராட்டம் நீண்டு கொண்டு செல்வதுதான் புதிது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே இந்தியாவில் நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் நடைபெறும் வினாத்தாள் கசிவை மையப்படுத்தி கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தார். அவருக்கு ஆதராவகவே கடந்த ஜூன் 28-ம் தேதி சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
ஜந்தர் மந்தரில் சோனம் உண்ணாவிரதம் இருக்கும் பகுதிக்கு அன்றாடம் ஊடகங்களும், இளைஞர்களும், பொது மக்களும் சாரை சாரையாக வருகின்றனர். பெரும்பாலான நேரம் சோனமுடன் மேடையில் அமர்ந்திருக்கும் அபிஜித், “நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி சொல்கிறோம். ஆனால் அவர் பிடிவாதமாக இருக்கிறார். இதுவரை அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்கும் அவரது ஆதரவாளர்களும் உயிரிழக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. அன்றைய தினம் நாடாளுமன்றம் நோக்கிய பேரணிக்கு சிஜேபி ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 15 முதல் 29 வயதில் உள்ள இந்தியர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 10% ஆக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதுவும் நகர்ப்புறங்களில் இந்த சதவீதம் 13.6 ஆக உள்ளது.
“வேலை வாய்ப்பின்மையும், கல்வி கற்கும் மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள் மீது அரசு கொண்ட அலட்சியமும் தான் இன்று 22 மில்லியன் ஃபாலோயர்ஸை சிஜேபிக்கு உருவாக்கியுள்ளது,” என்று கூறுகிறார் போராட்டக் களத்தில் உள்ள இளைஞர் ஒருவர்.
இன்னொரு இளைஞர், “2014-ல் அமைந்த மோடி அரசு இதுபோன்றதொரு எதிர்ப்பைக் கண்டதில்லை. இந்த எதிர்ப்பை அவர்கள் அசட்டை செய்கிறார்கள். அதன் பலனை அறுவடை செய்வார்கள்” என்று கூறுகிறார்.
இன்னும் 2 நாட்கள் மட்டுமே..!
ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும், சசி தரூரும் சோனம் வாங்சுக் போராட்டத்தைக் கைவிட வலியுறுத்துகின்றனர்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், ‘சோனம் வாங்சுக் இன்னும் 2 தினங்களுக்கு கூட உயிருடன் இருக்க மாட்டார். அவரை உடனடியாக வலுக்கட்டாயமாக உணவு உட்கொள்ளச் செய்யுங்கள்’ என்று கோரப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்கக் கோரப்பட்ட நிலையில், அது நாளை (ஜூலை 16) விசாரணைக்கு வருகிறது.
அந்த மனுவில் “சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் 18-வது நாளை எட்டியுள்ளது. ஆனால் அரசுக்கு அதைப் பற்றிய குறைந்தபட்ச அக்கறைகூட இல்லை. அரசு இவ்விவகாரத்தில் உணர்வற்றதாக இருக்கிறது. ஒரு கொடுங் குற்றவாளி, தேசத் துரோகி, தீவிரவாதையைப் போல் சோனம் வாங்சுக்-ஐ பாவித்து பாராமுகம் காட்டுகிறது. அவரை இப்படியே இறக்கவிட்டால் அது தேசம் தன் கண் முன்னரே ஒரு குடிமகனை மரணிக்க விடும் அவலம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இன்று மத்திய அரசு சார்பில் யாரும் ஆஜராகவில்லை என்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ ப்ளஸ் 2 ஹேர்வில் ஓஎஸ்எம் மதிப்பீட்டில் முறைகேடு, இன்னும் பல தேர்வு வினாத்தாள்களில் குளறுபடி என்று மாணவர்கள், இளைஞர்கள் கோபத்துக்கு தொடர்ந்து ஆளாகிவரும் மத்திய அரசு சோனம் வாங்சுக் விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கோ, இல்லை பிரதான் பதவி விலகல் குறித்தோ எதுவுமே பேசாமல் காக்கும் மவுனத்துக்கு மிகப் பெரிய விலை காத்திருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். நாளைய தீர்ப்பை தான் அறம் கொண்டோர் உள்ளங்கள் எதிர்நோக்கியிருக்கின்றன என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.
“போராட்டக் களத்தில் சோனம் வாங்சுக் பின்னால் இருப்பது ஒற்றைக் கோரிக்கை தான் ‘தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்’. அப்படியிருக்க மத்திய அரசின் போக்கு ஈவு இரக்கமற்ற அணுகுமுறை” என்கின்றனர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் இளைஞர்கள்.