'ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மனதளவில் முழுமையாக இந்தியர் அல்ல; அவர் வேண்டுமென்றே பொருளாதாரத்தை சீரழித்து விட்டார். எனவே, உடனடியாக அவரை நீக்க வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.
“நான் ஏன் அவரை உடனடியாக நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன் என்றால், இந்திய பொருளாதாரத்தை வேண்டுமென்றே நசிவுக்கு இட்டுச் சென்றுள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை அதிகரித்து பொருளாதாரத்தை சீரழித்தார்.
மேலும், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் கடந்த 2 ஆண்டுகளில் இருமடங்காகி ரூ.3.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
டாக்டர் ராஜனின் இத்தகையச் செயல்பாடுகள் இந்திய பொருளாதார வளர்ச்சியை விரும்புபவர் என்பதை விட இடையூறு விளைவிப்பவர் என்ற கருத்தையே என்னுள் ஏற்படுத்துகிறது.
மேலும், அவர் அமெரிக்க அரசு வழங்கிய கிரீன் கார்டுடன் இந்தியாவில் இருக்கிறார். எனவே, அவர் மனதளவில் முழுமையாக இந்தியராக அவர் இல்லை. இல்லையெனில் அவர் ஏன் ஆர்பிஐ கவர்னராக இருக்கும் போது தனது கிரீன் கார்டை புதுப்பிக்க வேண்டும்? கிரீன் கார்டைத் தக்கவைக்க ஆண்டு தோறும் கட்டாய அமெரிக்க பயணம் ஏன் மேற்கொள்ள வேண்டும்?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினால் நியமிக்கப்பட்ட ஒருவரை ஏன் இன்னும் பதவியில் வைத்திருக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. அவரோ இந்திய பொருளாதார நலன்களுக்கு எதிராக செயல்படுகிறார்.
நம் நாட்டிலேயே தேசப்பற்று மிக்க நிபுணர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரை ஏன் ஆர்பிஐ கவர்னராக நியமிக்கக் கூடாது? எனவே, தேச நலன் கருதி ரகுராம் ராஜனை பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் பின்னடைவு ஏற்பட்டபோது மொத்த விற்பனை விலை குறியீடு சரிவு கண்டது. ரகுராம் ராஜன் அப்போது மொத்த விற்பனை விலை குறியீடை விடுத்து நுகர்வோர் விலை குறியீடை இலக்காகக் கொண்டார். ஆனால் நுகர்வோர் விலை குறியீடு சில்லறை விற்பனை விலைகளால் சரிவடையவில்லை.
மாறாக, ரகுராம் ராஜன் மொத்த விற்பனை விலைக் குறியீடை இலக்காகக் கொண்டிருந்தால் வட்டி விகிதங்கள் தற்போது குறைந்து சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு பெரிய உந்துதல் கிடைத்திருக்கும். ஆனால் இந்தத் தொழில்துறை மேலும் நெருக்கடிக்குள்ளாகி வேலையில்லாத் திண்டாட்டம் உருவானது.
எனவே, அவர் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைவதை விரும்புபவர் போல் தெரியவில்லை, மாறாக இடையூறு விளைவிப்பவரே” என்று தனது கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மோதல் போக்கு - பின்னணி:
முன்னதாக, கடந்த மே 12-ம் தேதி சுப்பிரமணியன் சுவாமி திடீரென ரகுராம் ராஜன் பற்றி தனது கடும் விமர்சனத்தை முன்வைத்தார். அப்போது, 'ஆர்பிஐ கவர்னராக பணியாற்ற அவர் (ராஜன்) தகுதியற்றவர். அவர் கவர்னராக இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. ஆனால் நான் அவரைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் வட்டி விகிதங்களை அதிகரித்தார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சேதப்படுத்தினார்.
இவரது செயல்பாடுகளினால் தொழிற்துறை வீழ்ச்சி கண்டது, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. எனவே அவரை எவ்வளவு சீக்கிரம் சிகாகோ அனுப்புகிறோமோ அது நாட்டுக்கு நல்லது' என்றார்.
இதனையடுத்து, லண்டனில் தொடர் சொற்பொழிவுக்காகச் சென்றிருந்த ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், சுவாமியின் பெயரைக் குறிப்பிடாமல் இந்திய பொருளாதாரத்திற்காக இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்று தனது இரண்டாம் பதவிக்காலத்தை நீட்டிக்கும் தொனியில் சூசகமாக தெரிவித்தார்.
மேலும், அயல்நாட்டு முதலீடுகளை நம்பியிருக்கக் கூடாது என்றும் பணவீக்கத்திற்கும், அன்னியச் செலாவணிச் சந்தையில் ரூபாய் மதிப்பு சரிவடைவதற்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டி பணவீக்கத்தை குறைப்பதே தங்களது இலக்கு என்றும் பருவமழை பொய்க்காமல் சிறப்புற்றால் பொருளாதாரம் நினைத்த அளவுக்கு வளர்ச்சியுறும் என்றும் கூறி பணவீக்கக் கட்டுப்பாட்டுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் தொடர்பில்லை என்பதையும் சூசகமாகச் சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.