பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல் நலத்தோடு இருக்கிறார், மகிழ்ச்சியாக இருக்கிறார் என கர்நாடக சிறைத் துறை டி.ஐ.ஜி.ஜெய்சிம்ஹா அடிக்கடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பது ஏன் என அதிமுக அமைச்சர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜை சந்தித்து சிறைத்துறை இவ்வாறு கூறினால் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து கடந்த 29-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் தண்டனையை ரத்து செய்யக் கோரியும் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.
இம்மனு கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதா சார்பாக மூத்த வழக்க றிஞர் ராம்ஜெத்மலானி ஆஜரா னார். அவர் தனது வாதத்தில், ஜெயலலிதாவிற்கு 66 வயதாகி விட்டது.சர்க்கரை நோய்,உயர் ரத்த அழுத்தம், இதயக்கோளாறு உள்ளிட்ட நோய்கள் இருக்கிறது.சிறையில் தொடர்ந்து இருப்பது அவரது உடல் நலத்திற்கு ஆபத்தானது என மருத்துவர்கள் கூறியுள் ளனர்.எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இருப்பினும் அந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.எனவே ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.ஜெயலலிதா தனது உடல்நிலை குறித்த பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியே ஜாமீன் கோரி இருக்கிறார்.
கர்நாடக அரசிடம் முறையீடு
இதனிடையே அதிமுக அமைச்சர்கள் சிலர் செவ்வாய்க் கிழமை கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜார்ஜை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது சிறைத் துறை டி.ஐ.ஜி.ஜெய்சிம்ஹா மீது வாய்மொழியாக புகார் அளித்தி ருப்பதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “சிறையில் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லை. அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் எனக் கூறி தான் அவருக்கு ஜாமீன் கோரப்பட்டுள்ளது.
தற்போது உச்சநீதிமன்றத்தில் அவருடைய ஜாமீன் மனு விசாரணைக்கு வரவிருக்கிறது.
இந்த நிலையில் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.ஜெய்சிம்ஹா தினமும், ‘ஜெயலலிதா நல்ல உடல் நலத்தோடு இருக்கிறார்.சிறையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்'என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த செய்தியை நீதித்துறை வட்டாரத்தில் உள்ளவர்கள் படித்தால், உடல்நிலையை சொல்லி ஜாமீன் கோரி இருக்கும் ஜெயலலிதாவின் மனு என்ன ஆகும்?
இது தொடர்பாக கர்நாடக மாநில அதிமுகவினர் மூலமாக ஜெய்சிம்ஹாவிடம் எடுத்து சொல்லிவிட்டோம். இருப்பினும் அவர் நாள்தோறும் சொன்ன தையே மீண்டும் சொல்லிக் கொண்டி ருக்கிறார்.
இப்படி தான் சிறையில் இருக்கும் ஒவ்வொரு கைதியை பற்றியும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறாரா? ஜெயலலிதாவை பற்றி மட்டும் ஏன் அடிக்கடி சொல்லி கொண்டி ருக்கிறார்?
எனவே தான் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜை சந்தித்து இது தொடர்பாக பேசினோம்.ஜெய்சிம்ஹாவை ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டாம் என உத்தரவிடுமாறு கேட்டோம்.ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் நேர் மறையான செய்திகள் கூட,அவர் வெளியே வருவதற்கு சிக்கலாக மாறிவிடும் என எடுத்து சொன்னோம்.அதனை அவரும் ஏற்றுக்கொண்டார்''என்றனர்.
ஜெய்சிம்ஹா விளக்கம்
இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.ஜெய்சிம்ஹாவிடம் பேசியபோது, “ஜெயலலிதாவின் கைதும்,அவரது சிறைவாசமும் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா சிறையில் நன்றாக இருக்கிறார் என்று சொன்னால் மக்களிடம் அமைதி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.அதனால் தான் ஊடகங்கள் மூலம் எனது கடமையை நிறைவேற்றினேன்.இதில் எந்த உள்நோக்கமும் இல்லை''என்றார்.
பரப்பன அக்ரஹாராவில் வாடகைக்கு வீடு தேடும் அதிமுகவினர்
அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாநகராட்சி உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் பெங்களூரிலே மையம் கொண்டிருக்கின்றனர். பெங்களூர் நகரில் இருந்து 35 கி.மீ.தூரத்தில் உள்ள பரப்பன அக்ரஹாராவிற்கு தினமும் காலை 9 மணிக்கு வரும் செல்பவர்கள் மாலை 7 மணி வரை பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திலே காத்திருக்கின்றனர். இதனால் சிறை வளாகத்தில் சுமார் 1 கி.மீ.தூரத்திற்கு அதிமுகவினரின் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.
அதிமுகவினர் அங்குள்ள தனியார் ஓட்டல்களில் தங்குகின்றனர். ஓட்டல்களில் அதிக வாடகை கட்டணத்தை சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை ஆகும் வரை பரப்பன அக்ரஹாராவிற்கு வரவேண்டி இருப்பதால் இந்த சுற்றுவட்டார பகுதியில் வாடகைக்கு வீடு தேட அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் முடிவெடுத்துள்ளனர். எனவே சிறைக்கு அருகில் உள்ள சி.கே.நகர், நாகநாதபுரா, எலக்ட்ரானிக் சிட்டி, மடிவாளா ஆகிய பகுதிகளில் வாடகைக்கு வீடு தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பெங்களூரில் இருந்து பரப்பன அக்ரஹாரா சற்று தூரமாக இருப்பதால் அதிமுக அமைச்சர்கள் பெங்களூரில் தங்குவதை விரும்பவில்லை.
எனவே வீட்டு தரகர்களின் மூலம் சிறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வசதியான அடுக்குமாடி குடியிருப்புகளில் சில அதிமுக அமைச்சர்கள் தங்கியுள்ளனர். அதிமுகவினர் பரப்பன அக்ரஹாரா பகுதிகளில் வாடகைக்கு வீடு தேடுவதால் அங்கு வாடகை வீடுகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. இதனால் வீட்டு உரிமையாளர்கள் ஒரு வார வாடகை, 15 நாள் வாடகை, ஒரு மாத வாடகை என்கிற அளவில் வாடகைக்கு விடுகின்றனர். அதிக முன்பணமும் வாங்கிக்கொண்டு மேலும் இரு மடங்கு, மூன்று மடங்கு கூடுதல் வாடகையையும் பெற்றுக்கொள்கின்றனர். இதே போல வீட்டு புரோக்கர்களும் அதிக கமிஷன் கறந்து விடுவதாக கூறப்படுகிறது.