இந்தியா

தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

தயாநிதி மாறனுடன், பி.எஸ்.என்.எல். உயரதிகாரிகள் கே.பிரம்மநாதன், வேலுச்சாமி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, சென்னை அடையாறு போட் கிளப்பில் உள்ள அவரது வீட்டுக்கு 323 தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஐ.எஸ்.டி.என். என்றழைக்கப்படும் அந்த சர்வதேச தொலைபேசி இணைப்புகள் தயாநிதி மாறனின் வீடு மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் குழும தொலைக்காட்சி நிறுவனத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பெரும் அளவிலான விடியோ பதிவுகள், தகவல்களை அதிவேகமாக அனுப்ப உதவும் 323 ஐ.எஸ்.டி.என். தொலைபேசி இணைப்புகளும் தயாநிதி மாறனின் குடும்ப தொலைக்காட்சி சேனல்களுக்கு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு 2007-ல் அன்றைய தொலைத்தொடர்புத் துறை செயலருக்கு சிபிஐ பரிந்துரை செய்தது. ஆனால், அப்போது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், சிபிஐ தரப்பில் 2011-ம் ஆண்டு முதல் ஆரம்பகட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன. இதில், தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால் அவர் மீது இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT