இந்தியா

புதுவை முதல்வர், ஆளுநர் மீது இந்திய கம்யூ. குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் முதல்வரும் மூன்றாம் தர அரசியல்வாதிகள் போல குற்றம் சாட்டிக்கொள்வது முறையற்றது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நாரா. கலைநாதன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் திங்கள்கிழமை கட்சி அலுவலகத்தில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

காரைக்காலில் நடந்த விழாவில் துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா மீது முதல்வர் ரங்கசாமி குற்றம் சாட்டினார். அதற்கு ஆளுநரும் பதில் அளித்தார். இவ்விசயத்தில் சரியான நடைமுறையை இருவரும் கடைபிடிக்கவில்லை.

உண்மையில் இருவரும் மாநில மக்கள் மீது அக்கறையுடன் செயல்படுகிறார்களா என்ற கேள்விக்குறி எழுகிறது. மூன்றாம் தர அரசியல்வாதிகள் போல ஒருவரையொருவர் குற்றம் சுமத்துவது தேவையற்றது.

துணைநிலை ஆளுநர் தனக்கு தனி அதிகாரியை நியமித்து கொள்வது நடைமுறையில் உள்ளது. அதேபோல் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மோசமான நிலை பற்றி ஆளுநர் சுட்டிக்காட்டியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு பதில் தராமல் திடீரென்று மாநில அந்தஸ்து தொடர்பான விஷயத்தை முதல்வர் கையில் எடுத்துள்ளது பொருத்தமற்றது. பிரச்சினை ஏதாவது வந்தால் மட்டும் இவ்விசயத்தை முதல்வர் கையில் எடுக்கிறார்.

8 மாதங்கள் முன்பு என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் மாநில அந்தஸ்து தொடர்பாக கூட்டம் நடந்தது. அதையடுத்து அரசுதரப்பில் மாநில அந்தஸ்து தொடர்பான கூட்டம் கூட்டுவதாக முதல்வர் தெரிவித்தார். ஆனால், அதை செய்யவில்லை. 8 மாதங்கள் பின்பு தற்போது இதை பேசவேண்டிய சூழல் என்ன என்று கேள்வி எழுகிறது.

முதல்வர் ரங்கசாமி குற்றம் சுமத்தியது தொடர்பாக ஆளுநர் அவரை நேரில் அழைத்து பேசியிருக்க வேண்டும். மேலும், துணைநிலை ஆளுநரும் பல விசயத்தில் உண்மைக்கு மாறாகத்தான் பேசுகிறார். மணல் அள்ளுவது தொடர்பான கோப்பு உட்பட பல கோப்புகள் அவரிடம் தேங்கியுள்ளன என்று நாரா. கலைநாதன் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முருகன், அபிஷேகம், கீதநாதன் ஆகி யோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT