அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் து.மூர்த்தியின் மரணம் தொடர்பான விசாரணை முடிந்துள்ளது. இதில் ஆம்பு லன்ஸ் அனுப்புவதில் தவறு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நவீன இந்திய மொழிகள் துறையின் தலைவராக இருந்தவர் து.மூர்த்தி (64). இவருக்கு சில ஆண்டுகளாக அவ்வப்போது வயிற்று வலி இருந்து வந்தது. இந்நிலையில் அவருக்கு மலம் வெளியேறாமல் வயிறு வீக்கம் ஏற்பட்டதால் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி, அலிகர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடலில் அடைப்பு இருப்பதாகக்கூறி அவருக்கு உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.. மறுநாள் காலை மூர்த்திக்கு சிறுநீர் வெளியேறாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்கு டெல்லி கொண்டுசெல்லும்படி கூறப்பட்டது.
அதை பரிந்துரைப்பது யார் என்ற பிரச்சினை சிறுநீரக மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இடையே சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இதில் அலிகர் தமிழர்கள் தலையிட்டு அறுவை சிகிச்சை மருத்துவரிடம் பரிந்துரை பெற்றனர். பிறகு ஆம்புலன்ஸ் மற்றும் அதனுடன் செல்லவேண்டிய மருத்துவர் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இப்பிரச்சினை மாலை சுமார் 6.30 மணிக்கு முடிவுக்கு வந்தபோது மூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.
மூர்த்தியின் மரணத்தில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மருத்துவர் உட்பட மூன்று பேராசிரியர்கள் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை பல்கலைக்கழக பதிவாளரிடம் கடந்த மாதம் சமர்ப்பித்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் விசாரணைக்குழு வட்டாரம் கூறும்போது, “மூர்த்திக்கு சிகிச்சை அளித்த மற்றும் உடன் இருந்த பலரையும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அழைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வதில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர் இடையே கவனக்குறைவு இருந்துள்ளது. மதியம் சுமார் 2 மணிக்கு பரிந்துரைக்கப்பட்ட பின் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வதில் மாலை சுமார் 6 மணி வரை தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த விசாரணை மீது அதிக ஆர்வம் காட்டிய நிர்வாகம் தான் இதன் மீதான நடவடிக்கை குறித்தும் முடிவு செய்யும்” என்று தெரிவித்தனர்.
குறித்த நேரத்தில் பரிந்துரைக்கப்பட்டு, இரண்டரை மணி நேர பயணத்தில் உள்ள டெல்லிக்கு அனுப்பப்பட்டிருந்தால் மூர்த்தி உயிர் பிழைத்திருப்பார் என சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அப்போது புகார் எழுப்பினர். இதையடுத்து துணைவேந்தரான லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு), ஜமீருத்தீன் ஷா விசாரணைக்கு உத்தரவிட்டார்.
து.மூர்த்தி, தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்தவர். அவரது உடல் இங்கு இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டு, பின்னர் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.