உத்தரப் பிரதேச மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் அசம்கானுக்கு சொந்தமான பண்ணையிலிருந்து திருடுபோன 7 எருமை மாடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மூன்று போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
ஆளும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அசம்கான் ராம்பூரை சேர்ந்தவர். ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான அவருக்கு பஸ்ஸியாபுராவில் ஒரு பண்ணை வீடு உள்ளது. இங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 7 எருமை மாடுகள் கடந்த சனிக்கிழமை காணாமல் போய்விட்டன.
அவற்றை மீட்க வேண்டும் என காவல்துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து, ராம்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாதனா கோஸ்வாமி தலைமையில் ராம்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் மூன்று காவல் நிலையங்களின் போலீஸார் எருமைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இறைச்சிக் கூடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை பரிசோதித்தபோதும் பலன் கிடைக்கவில்லை.
இதுகுறித்து துப்பு தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என ராம்பூர் மாவட்ட ஆட்சியர் நரேந்தர்குமார் சௌகான் அறிவித்திருந்தார்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை பண்ணை வீட்டிற்கு மோப்ப நாய்களை வரவழைத்து பரிசோ தித்தனர். அத்துடன், மாநில புலனாய்வு போலீஸாரும் களம் இறங்கினர். இதன் பலனாக, மூன்று எருமைகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் கிடைத்தன. இரவுக்குள் மீதம் இருந்த நான்கு எருமைகளும் அடுத்தடுத்து புலனாய்வு போலீஸாரால் கண்டுபிடிக்கப் பட்டன.
3 போலீஸார் பணியிட மாற்றம்
பஸ்ஸியாபுரா கிளைக் காவல் நிலையத்தினரின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணம் எனக் கருதினார் அமைச்சர். இதனால் சம்பவ தினத்தில் அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் சுனில்குமார் மற்றும் 2 கான்ஸ்டபிள்கள் ஆகிய மூன்று பேர் பணியிட மாற்றம் செய்யப் பட்டனர்.
இந்தப் பிரச்சனைக்கு பாரதிய ஜனதா கட்சி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, பாஜகவின் உ.பி. மாநில மூத்த தலைவர் சித்தார்த் நாத் சிங் கூறுகையில், "அமைச்சரின் எருமைகள் திருட்டு போனால் போலீஸாருக்கு பணியிட மாற்றல் தண்டணை கிடைக்கும். ஆனால், திருட்டு, கொலை, பலாத்காரம் மற்றும் கலவரங்களில் ஈடுபவடுவோருக்கு எந்த தண்டணையும் கிடையாது" என்றார்.
இதுபற்றி ராம்பூர்வாசிகள் கூறுகையில், "அமைச்சரின் எருமைகளுக்கே இங்கு பாதுகாப்பு இல்லை என்றால், பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்" என்றனர்.
கடந்த 2012-13-ம் ஆண்டிற்கான தேசிய குற்றவியல் பதிவேட்டின் புள்ளிவிவரப்படி உ.பி. மாநிலத்தில் நிகழ்ந்த கொடூர குற்றங்கள் எண்ணிக்கை 33,824. இது பிஹார் மற்றும் மகராஷ்டிராவை விட அதிகம்.
இதுகுறித்து அசம்கான் கூறுகையில், "எருமைகள் திருடு போனது ஒரு சிறிய விஷயம். இதை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன" என்றார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முசாபர் நகரில் கலவரம் ஏற்பட்டது. இதில், 60-கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், சுமார் 40 ஆயிரம் பேர் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறினர். இதுதொடர்பான நிவாரணப் பணிகளை கவனிக்காமல், எம்.எல்.ஏ.க்களுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அசம்கான், இதுபற்றி சர்ச்சை எழுந்ததால் பாதியிலேயே நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.