நாடாளுமன்றத் தேர்தலில் மதவாத சக்திகளை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிரச்சார பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய முலாயம் சிங் யாதவ்: தேர்தல் களத்தில் தனக்கும் மோடிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால் அதில் மோடி நிச்சயம் தோற்பார். மக்கள் தன் பக்கம் இருக்கும் வரை சமாஜ்வாதி கட்சிக்கு தோல்வி கிடையாது, என்றார்.
மேலும், "மோடி என்பவர் யார்? குஜராத் கலவரத்தை அரங்கேற்றியவர் அவர். தேர்தலில் மக்கள் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். உ.பி. தேசத்துக்கு மிகப் பெரிய தலைவர்களை தந்திருக்கிறது. இங்கிருந்து உருவான ஜெய்பிரகாஷ் நாராயணன் காங்கிரஸுக்கு மிகப் பெரிய சவாலாக திகழ்ந்தார். நரேந்திர மோடிக்கும் தக்க சவால் உ.பி.யில் இருந்தே உதயமாகும்" என்றார்.
லோக்பால் சட்டம் நடைமுறைக்கு வந்தால் கோப்புகளில் கையெழுத்திடக் கூட அதிகாரிகள் அஞ்சும் நிலை ஏற்படும். இதனால் வளர்ச்சித் திட்டங்கள் முடங்கும் சூழல் ஏற்படும். இந்த காரணங்களுக்காகவே லோக்பாலை சமாஜ்வாதி எதிர்க்கிறது என்றார்.