டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி, அடுத்த மத்திய தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம் என்று எழுந்துள்ள செய்திகளை அடுத்து முன்னாள் தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி மத்திய அரசு மீது சாடியுள்ளார்.
முன்னாள் தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி தகவலுரிமைச் சட்ட செயல்பாட்டாளர் ஆவார்.
டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஸி மத்திய தகவல் ஆணையத்தின் அடுத்த தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம் என்று தெரியவந்ததையடுத்து அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹாவுக்கு சைலேஷ் காந்தி எழுதிய கடிதத்தில், “மத்திய தகவல் ஆணையத்தின் புதிய தகவல் ஆணையராக பி.எஸ். பாஸி நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது நடைமுறைக்கு விரோதமானது. தகவல் ஆணையரை தேர்வு செய்வது வெளிப்படையான முறையில் அமைவது அவசியம். அதாவது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் உணர்வுக்கேற்ப தேர்வு முறைகள் இருக்க வேண்டும்.
தகவல் ஆணையர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் பட்டியலைத் தயாரிப்பதில் வெளிப்படைத்தன்மை அவசியம். இதனைச் செய்யாதது தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கு இழைக்கும் பெரிய தீங்காகும்.
ஜே.என்.யூ விவகாரத்தில் கோர்ட் வளாகத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது இவரது உடந்தை மனோபாவ செயலின்மை நீதித்துறையின் புனிதத்தையும், மரியாதையையும் கெடுத்துள்ளது. ஒரு குடிமகன் இதனைச் செய்கிறார் என்றாலே ஏற்றுக் கொள்ள முடியாது எனும்போது, பொதுமக்களின் காவலனாகச் செயல்பட வேண்டியவர், சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர் பேசாமல் இருந்தது கண்டனத்திற்குரியது.
இந்நிலையில் மத்திய தகவல் ஆணையராக பாஸியை நியமிப்பது ஜனநாயகத்துக்கு சோகமான ஒரு தினமே. அப்போது இவரது செயல்களை அரசே அங்கீகரிக்கிறது என்று மக்கள் நினைக்கத் தொடங்குவார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தச் செய்தி உண்மையாக இருக்கக் கூடாது என்று தான் கருதுவதாகவும் தன்னுடைய கவலைகளை பிரதமரிடம் தெரிவிக்குமாறும் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.