இந்தியா

ஹெலிகாப்டர் ஊழல் எதிரொலி: இத்தாலி நிறுவன ஒப்பந்தம் ரத்து

செய்திப்பிரிவு

நவீன ஹெலிகாப்டர்களை வாங்க இத்தாலிய நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன் மேற் கொள்ளப்பட்ட ரூ.3,600 கோடி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.

இந்த ஒப்பந்தத்தைப் பெற, இந்திய விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள், மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ரூ. 360 கோடி லஞ்சம் தரப்பட்டதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புகார் எழுந்தது. குறிப்பாக இந்திய விமானப் படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகிக்கு, இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.

லஞ்சம் தந்தது தொடர்பாக அகஸ்டாவெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை செயல் அதிகாரி கியூசெப் ஓர்ஸி உள்ளிட்ட இருவரை இத்தாலி போலீஸார் கைது செய்தனர். அது தொடர்பான விசாரணை இத்தாலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

2010-ம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட ஒப்பந்தத்தின்படி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்களுக்கு ஏ.டபிள்யூ-101 ரகத்தைச் சேர்ந்த மொத்தம் 12 ஹெலிகாப்டர்களை இந்தியா கொள்முதல் செய்ய விருந்தது. அதில் 3 ஹெலி காப்டர்களை அந்நிறுவனம் ஏற்கெனவே வழங்கிவிட்டது. அந்நிறுவனத்துக்கு தர வேண்டிய ரூ.3,600 கோடியில் முதல் தவணையாக 30 சதவீதத் தொகையை இந்தியா வழங்கிவிட்டது.

இந்நிலையில், லஞ்ச விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து ஒப்பந்தத்தை முடக்கிவைப்பதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா அறிவித்தது.

பின்னர், அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு இந்தியா நோட்டீஸ் அனுப்பியது. அந்நிறுவனம் அளித்த பதிலை இந்தியா நிராகரித்துவிட்டது. இந்த ஒப்பந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணத்தை ஆராய்ந்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதியது.

ஒப்பந்தம் ரத்து

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி ஆகியோர் புதன்கிழமை ஆலோசனை நடத்தினர். இதில், ஹெலிகாப்டர் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை எடுத்தனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “12 ஹெலிகாப்டர்களை வழங்குவதற்காக 2010-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம். அந்நிறுவனம் நேர்மையின்றி செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் பேரத்தில் லஞ்சம் அளித்துள்ளதன் மூலம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் நேர்மையான செயல்பாடு தொடர்பான ஒப்பந்த விதிகளை மீறிவிட்டது. அதனால், அந்நிறுவனத்திடம் 50 கோடி யூரோ நஷ்ட ஈடு கோர வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக சர்வதேச ஒப்பந்தங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மத்தியஸ்தர் குழு மூலம் தீர்வு காணப்படும். ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் மத்தியஸ்தர் குழுவில் இந்தியா சார்பில் பேசுவதற்கு முன்னாள் நீதிபதி ஜீவன் ரெட்டியை மத்திய அரசு நியமித்துள்ளது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் தரப்பில் முன்னாள் நீதிபதி பி.என்.கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT