கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்துக்கு சென்ற 6 பேர் கொண்ட கும்பல், தங்களை சிபிஐ அதிகாரிகள் எனக் கூறினர். பின்னர் அங் கிருந்த 46 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து முத்தூட் நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சைபராபாத் போலீஸார் கொள்ளையர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஹைதராபாத் நகைக்கடைகளில் நகைகளை விற்ற விஜயகுமார் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளை யடித்த கும்பலை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் கொடுத்த தகவல்களின்படி, மேலும் 6 பேரை கைது செய்து 3.5 கிலோ தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே இந்த கொள்ளை திட்டத்துக்கு தலைவனாக விளங்கிய சுந்தர் ராஜரத்தினம் கங்கள்ளா மற்றும் அவரது மனைவி ராதா கங்கள்ளா ஆகி யோர் மும்பையில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சைபராபாத் போலீஸார் மற்றும் அதிரடிப் படையினர் மும்பை விரைந்தனர். அங்கு தாராவி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த சுந்தரை போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இவர் கூறிய தகவலின் பேரில் வேறொரு குடியிருப்பில் தங்கி இருந்த இவரது மனைவி ராதா கங்கள்ளாவையும் போலீஸார் கைது செய்து, 2.25 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். மொத்தம் கொள்ளையடிக்கப்பட்ட 46 கிலோ தங்கத்தில் இதுவரை 41 கிலோ தங்கம் இந்த கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சைபராபாத் போலீஸார் கூறி உள்ளனர்.