மகாராஷ்டிராவில் சாதி பஞ்சாயத்து மூலம், சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட தம்பதி, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் இல்லத்தில் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள மகாதேவாச்சே கெர்வாடே என்ற கிராமத்தில் பரமானந்த ஹேவலேகர் மற்றும் பிரீத்தம் ஆகிய தம்பதி ஜாட் பஞ்சாயத்து மூலம், சமூகத்தைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டனர்.
விநாயகர் சதுர்த்தியின்போது, பிள்ளையார் சிலை வைத்து வழிபடவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து, மந்த்ராலயாவில் இருவரும் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மாநில தலைமைச் செயலகத்தின் பிரதான நுழைவு வாயிலில் விநாயகர் சிலையுடன் இருவரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இதையறிந்த முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், இருவரையும் மும்பையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வரவழைத்து, அங்கே விநாயகர் பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்தார்.
மாவட்ட ஆட்சியாளர் மற்றும் சிந்துதுர்க் மாவட்ட எஸ்பி ஆகியோர் இதற்கான நட வடிக்கையை மேற்கொண்டனர். மேலும், கணவன் மனைவியை சமூகத்தை விட்டு ஒதுக்கிவைத்து பஞ்சாயத்து தீர்ப்பளித்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு முதல்வர் பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.