இந்தியா

மும்பை தாக்குதல்: 5-வது ஆண்டு நினைவு அஞ்சலி

செய்திப்பிரிவு

மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவாண், உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பேர், மும்பையின் தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸார், என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள், 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி புனாவில் உள்ள எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த போலீஸார், பொது மக்களை நினைவுகூரும் வகையில், அந்த சம்பவத்தின் 5-வது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. மும்பையின் மெரைன் லைன்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயிர்நீத்த போலீஸாரின் நினை விடத்தில் முதல்வர் பிருதிவிராஜ் சவாண், உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், மத்திய அமைச்சர் சசி தரூர், மும்பை காவல்துறை ஆணையர் சத்யபால் சிங், உயிரிழந்தோரின் உறவினர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பாஜக விமர்சனம்

பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் பேஸ்புக் இணையதளத்தில் கூறியிருப்பதாவது: “மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு காரண மானவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அவர்களை பாகிஸ்தான் தன்னிடம் ஒப்படைப்பதற்கு இந்தியா போதிய நெருக்குதலைத் தரவில்லை. இந்த விவகாரத்தில் ராஜ்ஜிய ரீதியாக போதிய அழுத்தங்களை பாகிஸ்தான் மீது செலுத்தாதது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும். 5 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்பும், எந்தவொரு மாற்றமும் இல்லை. தீவிரவாதிகள் எளிதாக தாக்கக்கூடிய இலக்காக இந்தியா இருக்கிறது” என்றார்.- பி.டி.ஐ.

SCROLL FOR NEXT