இந்தியா

தீவிரவாதிகளை ஆதரிப்பதை பாக். நிறுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

பிடிஐ

தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு சார்பில் 2-வது பூகோள-அரசியல் மாநாடு (ரெய்சினா டயலாக்) டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 65 நாடுகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

தெற்கு ஆசியா நாடுகளுடன் நல்லுறவை வளர்க்க விரும்புகிறேன். அந்த அடிப்படையில்தான் என்னுடைய பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் உட்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். இந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட லாகூருக்கு பயணம் செய்தது உட்பட பல முயற்சிகளை எடுத்தேன். ஆனால், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவி இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இருதரப்பு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமே அமைதி பாதையில் நடக்க முடியாது. அதில் பாகிஸ்தானும் இணைந்து பயணிக்க வேண்டும். இருதரப்பு பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் தீவிரவாத அமைப்புகளுக்கு அளித்து வரும் ஆதரவை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT