டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க துணை நிலை ஆளுநர் அனுப்பிய பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
டெல்லியில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கிடம், திங்கள் கிழமை தெரிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
இதனையடுத்து, ஆளுநர் நஜீப் ஜங், ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது தொடர்பாக பரிந்துரைக் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பார்வைக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் அதற்கு இன்று (புதன் கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார்.
டிசம்பர் 28-ல் பதவியேற்பு:
டிசம்பர் 28-ஆம் தேதி டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் இன்றைக்கு தான் கிடைத்தது என்பதால் பதவியேற்பு விழ 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
கடந்த 2011- ஆம் ஆண்டில் லோக்பால் மசோதா நிறைவேற்றக் கோரி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கிய ராம் லீலா மைதானத்தில், பதவியேற்பு விழா நடைபெறும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.