இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி, ஆந்திரா ஒன்றிணைந்தே இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தனித் தெலங்கானா அமைக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவை எதிர்த்துள்ள அவர், ராஷ்ட்ரபதி பவனில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, ஐந்து பக்க அறிக்கை ஒன்றை சமரப்பித்தார். இந்தப் பிரிவினையால் வரக்கூடிய பிரச்சினைகளை அவரிடம் விளக்கி, மாநிலம் ஒன்றாக இருக்க வழிவகை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பிறகு, பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜகன்மோகன், மத்திய அரசு, ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதில் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், இதனால் மற்ற மாநிலங்களிலும் இத்தகைய பிரிவினைகள் நடக்க இது வித்திடுவதாக அமையும் என்றும் குடியரசுத் தலைவரிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
நதி நீர் பங்கீடு, அரசாங்க ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இது மேலும் சிக்கல்களைத் தரும் என்றும் கூறினார்.
ஜகன்மோகன் ரெட்டி, குடியரசுத் தலைவரை சந்திப்பது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறை. ஏற்கனவே, நவம்பர் 4ஆம் தேதி, பிரணாப் முகர்ஜி ஹைதராபாத் வந்திருந்தபோது ஜகன்மோகன் அவரைச் சந்தித்து பேசினார்.
எதிர்கட்சிகள் கண்டனம்
இதனிடையே, எதிர்கட்சியான தெலுங்கு தேச கட்சியினர், குடியரசுத் தலைவர் இருபது நாட்களுக்குள், ஜகனை இரண்டு முறை சந்திக்க வாய்ப்பளித்தது தவறு எனக் கூறியுள்ளனர். அக்கட்சியின் தலைவர் சந்திரமோகன் ரெட்டி "நாட்டின் முதல் குடிமகனான பிரணாப், ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை இப்படி சந்திப்பது மக்களிடையே தவறான அபிப்ராயத்தை உண்டாக்கும்" என்றார்.
மற்ற கட்சிகளின் ஆதரவு
16 மாதங்கள் சிறையில் இருந்த ஜகன், செப்டம்பர் மாதம் ஜாமீனில் விடுதலையானார். அவர் தில்லி மற்றும் நாட்டின் இன்ன பிற பகுதிகளுக்கு பயணம் சென்று வர, சில ஜாமீன் விதிகளை சிபிஐ நீதிமன்றம் இந்த வாரம் தளர்த்தியுள்ளது.
ஆந்திராவின் பிரிவினைக்கு எதிராக, மற்ற கட்சித் தலைமைகளின் ஆதரவைக் கோரி, ஜகன் மோகன் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்கத்தின் முதல்வருமான மம்தா பேனர்ஜியை சந்தித்துப் பேசினார்.
சனிக்கிழமை மாலை, ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவை தில்லியிலும், ஞாயிறன்று பிஜு ஜனதா தள தலைவரும், ஒடிஷாவின் முதல்வருமான நவீன் பட்நாயக்கையும் சந்திக்கவுள்ளார்.