கடந்த மே மாதம் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் செய்யப்பட்ட பிரச்சார செலவுக் கணக்கை, காங்கிரஸ், பாரதிய ஜனதா உட்பட 25 அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் இன்னும் சமர்ப்பிக்காமல் உள்ளன.
தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நினைவூட்டலுக்கு பின்பும் செலவுப் பட்டியல் இன்னும் அளிக்கப்படாமல் உள்ளதாக, இந்திய ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர். இந்தியா) தகவல் அளித்துள்ளது.
இதை குறிப்பிட்டு ஏ.டி.ஆர். இந்தியா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை யில், “அரசியல் கட்சிகள் தங்களது செலவின அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது அவற்றை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து, உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிப்பதாகும்.
நிதி நிலை வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்க பொதுமக்கள் பார்வைக்கு குறித்த காலத்துக்குள் முழுமையான, சரியான அறிக்கைகளை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பித்து தேசிய, பிராந்திய கட்சிகள் உதாரணம் படைக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அரசியல் கட்சியும், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் தங்களது செலவுப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 1996, ஏப்ரல் 4-ம் தேதி உத்தரவிட்டது. இதன்படி இந்த அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளான கடந்த மே 16, 2014-ல் இருந்து 3 மாதங்களுக்குள் செலவுப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதை செய்யவில்லை என காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் உட்பட 46 தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுக்கு கடந்த செப்டம்பர் 8-ல் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்திருந்தது. எனினும் காங்கிரஸ், பாஜக உட்பட 25 கட்சிகள் இன்னும் செலவுப் பட்டியலை சமர்ப்பிக்காமல் உள்ளதாக ஏ.டி.ஆர். இந்தியா குறிப்பிட்டுள்ளது. இதில், அங்கீகரிக்கப்படாத 419 அரசியல் கட்சிகளில் வெறும் 17 கட்சிகள் மட்டுமே செலவுப்பட்டியலை சமர்ப்பித்துள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
இத்துடன் கடந்த வருடம் நடந்த பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களின் பிரச்சார செலவுப் பட்டியல்களையும் சில அரசியல் கட்சிகள் இன்னும் சமர்ப்பிக்காமல் உள்ளதாக, அந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது.