பெங்களூருவில் உள்ள ஏரிகளையும், ஆறுகளையும் பாதுகாக்கக் கோரி பள்ளி மாணவ, மாணவியர் ஆயிரம் பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள வர்தூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் அடிக்கடி பொங்கி, நுரை வெளியேறுகிறது. இதனால் ஏரியை சுற்றியுள்ள சாலைகளில் கழிவு நீர் நுரை குவிந்து சுற்றுச்சூழலுக்கும், போக்குவரத்துக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
இப்பிரச்சினையை சரி செய்யக் கோரி, வர்தூரில் உள்ள கே.கே. உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் ஆயிரம் பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ''தூய்மையான காற்று, தூய்மையான நீர், தூய்மையான சுற்றுச்சூழல் ஆகிய மூன்றும் எதிர்கால இளைய தலைமுறைக்கு கிடைக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பள்ளி மாணவர்கள் பல ஆண்டுகளாக வர்தூர் ஏரியை தூய்மைப் படுத்தும் பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.