உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத்தில் காய்ச்சலால் இறந்த தன் 9 வயது மகளின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல விவசாயித் தந்தைக்கு அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தர மறுத்தது.
இதனையடுத்து அந்த விவசாயி உறவினர் ஒருவரின் மோட்டார் பைக்கில் சிறுமியின் உடலை எடுத்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பாக்பத்தின் கவுரிபூர், ஜவஹர்நகரில் வசிப்பவர் இக்பால், இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது 9 வயது மகள் ரேஷ்மாவை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். ஆனால் அனுமதித்த செவ்வாய்க் கிழமையே சிறுமியின் உயிர் பிரிந்தது.
“குறித்த காலத்தில் ரேஷ்மாவுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை, இதனால் என் மகள் உயிர் பிரிந்தது. இறந்த அவள் உடலை என் கைகளில் ஏந்திய படி மணிக்கணக்கில் நான் ஆம்புலன்சுக்காகப் போராடினேன். ஆனால் என் குரல் யாருக்கும் கேட்கவில்லை. நீண்ட நேரம் காத்திருந்தேன் ஆனால் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. இதனையடுத்து உறவினர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ரேஷ்மாவின் உடலை எடுத்துச் சென்றேன்” என்று தந்தை இக்பால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் பாக்பத் தலைமை மருத்துவ அதிகாரி இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, அவரேதான் பைக்கில் எடுத்து சென்றார் என்று கூறினார்.
இதனையடுத்து மேஜிஸ்ட்ரேட் பவானி சிங் காங்ராத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.’
உ.பி. யோகி ஆதித்யநாத் அமைச்சரவையின் கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகெல் இச்சம்பவம் குறித்து ஆவேசமடைந்தார், “மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லாவிட்டாலும் ஏதாவது தனியார் வாகனத்திற்கு நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இறந்த சிறுமியை கவுரவமாக அனுப்பி வைத்திருக்க வேண்டும். இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், விசாரணை முடிவுக்காகக் காத்திருக்கிறோம்” என்றார் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழிடம்.
கவுஷாம்பி மாவட்டத்தில் இருவாரங்களுக்கு முன்பாக ஒருவர் தன் உறவினர் ஒருவர் உடலை சைக்கிளில் 10 கிமீ தூரம் வரை எடுத்துச் சென்றதற்குப் பிறகு நடந்துள்ளது. இவருக்கும் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மறுத்துள்ளது. கடந்த வாரம் கருவுற்றிருக்கும் தாய் ஒருவர் குழந்தைப் பேற்றுக்காக வலியில் துடித்துக் கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் மறுத்தது அரசு மருத்துவமனை.