பாலியல் பலாத்கார தடுப்புச் சட்டத்தைக் கடுமையாக்கிய போதிலும், நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையவில்லை என்று மக்களவைத் தலைவர் மீரா குமார் கவலை தெரிவித்தார்.
நாட்டையே உலுக்கிய டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு ஆனதையொட்டி (டிச.16) நாடாளுமன்றத்துக்கு வெளியே மக்களவைத் தலைவர் மீரா குமார் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, "அந்த நிகவுக்குப் பிறகு, பெண்களின் பாதுகாப்புக்காக வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அதற்காக, நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமூகத்தின் அனைத்துத் தர்ப்பில் இருந்தும் கருத்துகளைக் கேட்டறிந்து, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வலுவான சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால், கடந்த ஓராண்டு காலத்தில் நிலைமை உண்மையாகவே மாறியதாக நினைக்கவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்தை அனைத்து மட்டத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். சமூகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கப்பட வேண்டும்" என்றார் மீரா குமார்.
நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட பாலியல் பலாத்காரத் தடுப்பு மசோதாவில், பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதைத் தடுப்பதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
இதன் ஷரத்துகளை மீறுவோருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும், தொழில் செய்வதற்கான உரிமம் அல்லது பதிவு ரத்து ஆகிய நடவடிக்கைகள் எடுக்கவும் இது வழிவகுக்கிறது.
இந்தச் சட்டத்தின் கீழ், வீட்டு வேலை செய்யும் பெண்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களும் கொண்டுவரப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.