கோவாவில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 பயணிகள் பலியாகினர்.
கோவா மாநிலம் பனாஜியில், பீடுல் கிராமம் அருகே உள்ள கடலில் டால்பின் மீன்கள் அதிகமாக காணப்படுகிறது. இப்பகுதியில், சுற்றுலாப் பயணிகள் படகுச் சவாரி சென்று டால்பின் மீன்களை கண்டுகழிப்பது வழக்கம்.
செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில், இப்பகுதிக்கு வந்த ரஷ்யாவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் ஒரு படகில் சவாரி மேற்கொண்டனர்.
டால்பின் மீன்களை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென பேரலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் படகு நிலை தடுமாறி கவிழ்ந்தது. படகில் இருந்தவர்களில் 3 பெண்கள் பரிதாபமாக பலியாகினர். அவர்களது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.