இந்தியா

கேரள டிஜிபி நீக்கம் செல்லாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

கேரள முன்னாள் டிஜிபி சென்குமார் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், அவரை நீக்கியது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்துக் கூறியுள்ள நீதிமன்றம், ''சென்குமாரை நீக்கியது தன்னிச்சையானது; சட்ட விதிகளின் படி அவர் நீக்கப்படவில்லை. ஒட்டுமொத்த சூழலையும், உண்மைத் தன்மையையும் பார்க்கும்போது, மத்திய நிர்வாக தீர்ப்பாணையம் வழங்கிய தீர்ப்பு செல்லாது. சென்குமார் மீண்டும் டிஜிபி பதவியில் அமர்த்தப்பட வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

இதன்மூலம் புதிதாகப் பொறுப்பேற்ற லோக்நாத் பெஹரா, அவரின் டிஜிபி பொறுப்பில் இருந்து விலக்கப்பட வேண்டும்.

என்ன நடந்தது?

கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த 2-வது நாளில் டிஜிபி பதவியில் இருந்து சென்குமார் நீக்கப்பட்டு பணி மாற்றம் செய்யப்பட்டார். சட்டக் கல்லூரி தலித் மாணவர் படுகொலை வழக்கு மற்றும் புட்டிங்கல் கோயில் தீ விபத்து விவகாரங்களைக் கையாள்வதில் தோல்வி அடைந்ததால், இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்டது.

மாநில அரசின் முடிவை எதிர்த்து சென்குமார் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாணையம் மற்றும் கேரள உயர் நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பளித்தன. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சென்குமார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சென்குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவும், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும் ஆஜராகி வாதாடினர். அப்போது அரசியல் உள்நோக்கத்துக்காகவே தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக சென்குமார் நீதிபதியிடம் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) சென்குமார் மீண்டும் டிஜிபி பதவியில் அமர்த்தப்படவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

SCROLL FOR NEXT