இந்தியா

இளம்பெண்ணை வேவுபார்த்த விவகாரம்: அறிவிப்போடு நின்றுபோன விசாரணை கமிஷன்- ஒரு மாதமாகியும் நீதிபதி நியமிக்கப்படவில்லை

செய்திப்பிரிவு

இளம்பெண் வேவுபார்ப்பு விவ காரம் தொடர்பாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட விசாரணை கமிஷனுக்கு ஒரு மாதமாகியும் நீதிபதி நியமிக்கப்படவில்லை. இதனால் அந்த விசாரணை கமிஷன் அறிவிப்போடு நின்று போகியுள்ளது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ரகசிய உத்தரவின் பேரில் பெண் பொறியாளர் ஒருவரை அந்த மாநில தீவிரவாத எதிர்ப்புப் படை போலீஸார் வேவு பார்த்ததாக கோப்ராபோஸ்ட், குலைல் ஆகிய புலனாய்வு இணையதளங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் மாநில அரசு சார்பில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கமிஷன் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு சார்பில் தனியாக விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 நபர்கள் கொண்ட கமிஷன் அமைக்கப்படும் என்றும் 3 மாதங்களில் அந்த கமிஷன் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் சில நீதிபதிகளை அணுகியபோது அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி தொடர்பான விவகாரம் என்பதால் விசாரணை கமிஷனின் தலைமை பொறுப்பை ஏற்க நீதிபதிகள் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிகிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவிடம் கேட்டபோது, கமிஷனுக்கு தலைமையேற்க நீதிபதி கிடைக்கவில்லை என்று கூறப்படுவது தவறு, இந்த விவகாரத்தில் சில பிரச்சினைகள் உள்ளன என்று மட்டும் தெரி வித்தார்.

SCROLL FOR NEXT