புனே சமூக தொண்டு அமைப்பான சர்ஹாத், இந்தியத் திரையுலகின் தலைசிறந்த பாடகிகளுள் ஒருவரான ஆஷா போஸ்லே அரை நூற்றாண்டுக்கு முன்பு பாடிய இரண்டு அரிய காஷ்மீரி பாடல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) தனது 83 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆஷா போஸ்லேவைச் சிறப்பிக்கும் விதமாக இந்த சிடி வெளியிடப்பட்டுள்ளது. விழாவில் கலந்துகொண்ட காஷ்மீரி எழுத்தாளர் பிரான் கிஷோர் கால்,
''1966-ம் ஆண்டு கோடைக் காலத்தில், ரேடியோ காஷ்மீர் வானொலி நிலையத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த காஷ்மீரி கவிஞர்கள் ரசுல் மிர் மற்றும் ஷமஸ் ஃபக்கிர் ஆகியோரின் கவிதைகளைக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமான பாடல்களை பாடினார் போஸ்லே.
1850- களின் மத்தியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அக்கவிஞர்கள் இருவரும் காதல் கவிதைகளின் அடையாளமாகத் திகழ்ந்தனர்.
ரேடியோ காஷ்மீருக்குப் பேட்டி அளிக்க வந்தவரை, காஷ்மீரி பாடலைப் பாட முடியுமா என்று அலுவலகத்தில் கேட்டிருக்கின்றனர். படகோட்டிகள் பேசியதைத் தவிர, காஷ்மீரி மொழி பேசுவதைக் கேட்டிராத போஸ்லே தயங்கியிருக்கிறார். மென்மையான வற்புறுத்தலுக்குப் பிறகு பாட ஒப்புக்கொண்டவர், ரசுல் மிர்ரின் பாடலைத் தேர்ந்தெடுத்தார். மராத்தியில் அதனுடைய அர்த்தத்தைக் கேட்டறிந்தவர் விரைவில் ஒலிப்பதிவுக்கு வர ஒப்புக்கொண்டார்.
விரைவில் கற்பவர்
சில ஒத்திகைகளிலேயே காஷ்மீரி வார்த்தைகளின் உச்சரிப்புகளைக் கற்றுக்கொண்ட போஸ்லே, எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
குறைவான நேரத்தில் பாடல் பதிவு செய்யப்பட்டு வெற்றியடைந்தது. ஒவ்வொரு காஷ்மீரிகளின் இதயத்தையும் தொட்டது.போஸ்லே இரண்டாவதாகப் பாடிய ஷமஸ் ஃபக்கிரின் கவிதை முன்னதைவிட மாபெரும் வெற்றியடைந்தது. ஒலிப்பதிவு முடிந்தவுடன் போஸ்லே அவரின் சம்பளத்தை அங்கேயே வாத்தியக்காரர்களுக்குப் பிரித்துக்கொடுக்கச் சொன்னார்.
ஒரு காஷ்மீரியாக போஸ்லேயின் முன்னால் தலை வணங்கி நிற்கிறேன். அவர் மகாராஷ்டிரா மற்றும் காஷ்மீரோடு எப்போதும் உணர்ச்சிப்பூர்வமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறார். அவ்விரண்டு பாடல்களும் இன்றும் காஷ்மீரிகளின் மனதில் நிறைந்து நிலைத்திருக்கின்றன'' என்றார்.