தேசத் துரோக வழக்கில் குற்றம்சாட்ட ஜேஎன்யூ மாணவர்களிடம் போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் முக்கிய நிகழ்வாக, தேசத் விரோத கோஷங்கள் எழுப்பியதாக தேசத் துரோக வழக்கில் தேடப்பட்டுவந்த ஜேஎன்யூ மாணவர்கள் ஐவரில் ஒருவரான அசுதோஷ் குமார் இன்று (சனிக்கிழமை) விசாரணைக்காக போலீஸில் ஆஜரானார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 9-ம் தேதி நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதர வாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தேசத் துரோக வழக்கில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 21-ம் தேதி சக மாணவர்கள் உமர் காலீத்தும், அனிர்பன் பட்டாச்சார்யாவும் போலீஸில் சரணடைந்தனர்.
இதையடுத்து மூன்று பேரிடமும் கூட்டாக விசாரணை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்தனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
தெற்கு டெல்லியில் உள்ள ஆர்.கே.புரம் போலீஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய இந்த விசாரணையின் முதல் சுற்று, சுமார் ஐந்து மணி நேரம் வரை நீடித்தது. அவர்களிடம் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக, முதல் சுற்றில் கண்ணய்யாவுடன் காலீத்தையும், அனிர்பனையும் தனித்தனியாக போலீஸார் விசாரணை நடத்தினர். இரண்டாம் சுற்றில் மூவரையும் ஒன்றாக அமரவைத்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் யார்? பங்கேற்ற வெளிநாட்டினர் யார்? நிகழ்ச்சியின் போது என்ன நடந்தது? என பல்வேறு கேள்விகளைக் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அசுதோஷ் குமாருக்கு நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) இரவு போலீஸார் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து அசுதோஷ் குமார் இன்று (சனிக்கிழமை) ஆர்.கே.புரம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராம நாகா, அனந்த் குமார் ஆகிய மற்ற இரண்டு மாணவர்களுக்கும் இதுவரை போலீஸ் சம்மன் அனுப்பவில்லை. இருப்பினும், தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக அவர்கள் இருவரும் காவல்துறைக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.