இந்தியா

சகாபுதீன் ஜாமீனை எதிர்த்து 3 மகன்களை இழந்த தாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

பிடிஐ

பிஹார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் சகாபுதீன் மீது கொலை, கடத்தல் வழக்குகள் உள்ளன. கொலை வழக்கில் சகாபுதீனுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

இந்நிலையில், சகாபுதீனுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து சகாபுதீனால் கொல்லப்பட்டதாக கூறப்படும் 3 மகன்களின் தந்தை சந்திரகேஸ்வர் பிரசாத், உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சகாபுதீன் பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், 3 மகன்களின் தாய் கலாவதி தேவி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘சகாபுதீன் பயங்கரமான கிரிமினல். கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களை செய்தவர். அவருக்கு உயர் நீதி மன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், கொலை செய் யப்பட்ட பத்திரிகையாளர் ராஜ்தேவ் ரஞ்சனின் மனைவி உச்ச நீதி மன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘‘சகாபுதீனின் வழக்கை டெல்லிக்கு மாற்ற வேண்டும்’’ என்று கோரி யுள்ளார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT