இந்தியா

சொத்துக் குவிப்பு வழக்கில் அமலாக்கத் துறை முன்பு ஆஜரானார் இமாச்சல் முதல்வர்

பிடிஐ

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர் பாக, இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் நேற்று நேரில் ஆஜரானார்.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மத்திய உருக்குத் துறை அமைச்சராக (2009- 2011) இருந்த வீரபத்ர சிங், வருமானத்துக்கு அதிகமாக ரூ.10 கோடிக்கு சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. சிபிஐ நீதிமன்றத்தில் சிங், அவரது மனைவி பிரதிபா மற்றும் சிலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வீர்பத்ர சிங் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு வீரபத்ர சிங்குக்கு கடந்த 13-ம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அப்போது, நேரில் ஆஜராக விலக்கு கோரியிருந்தார். இதையடுத்து, 20-ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, வீரபத்ர சிங் டெல்லி யில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று பிற்பகல் ஆஜரானார். அவரிடம் செய்தி யாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் அவர் செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டார்.

SCROLL FOR NEXT