தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தின்போது, நிற வெறிக்கு எதிராகப் போராடிய மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், "மண்டேலா அவரது தலைமுறையினருக்கு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
நிற வெறியைப் அகற்றுவதற்காக அவர் தனிப்பட்ட முறையில் ஆற்றிய பணி முன்னுதாரணமாக விளங்குகிறது. அவரது மறைவுக்கு இந்தியாவும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது" என்றார்.