இந்தியா

வேட்பாளர்களின் வீடுகளில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு: கர்நாடகாவில் தேர்தல் ஆணையம் அதிரடி

இரா.வினோத்

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ள‌து.

முதல்கட்டமாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் வேட்பாளர் நந்தன் நிலகேனி மற்றும் முன்னாள் அமைச்சர் ராமுலு ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் திங்கள்கிழமை சிசிடிவி கேமரா பொருத்திய‌தாக தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 26-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் களத்தில் குதித்திருக்கும் வேட் பாளர்களையும் அரசியல் கட்சியினரையும் கண்காணிப் பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அனில் குமார் கூறுகையில்,'' வேட்பாளர்களைக் கண்காணிப்பதற்காக வீடு மற்றும் அலுவலகங்க‌ளில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. மக்களவை தேர்தலை நேர்மையாகவும் அமைதியாகவும் நடத்துவதற்கு இத்தகைய நடவடிக் கைகள் கைகொடுக்கும். வேட்பாளர்களின் இருப்பிடங் களில் சிசிடிவி கேமரா பொருத்து வதன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க முடியும். அதே நேரத்தில் அரசியல் கட்சியி னரிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் தவிர்க்கவும் முடியும்'' என்றார்.

நியாயமா?

வேட்பாளர்களின் இருப்பிடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக் கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மறைமுக கண்டனத்தை தெரிவித்துள்ளன. ‘இது வேட்பாளர்களின் உரிமையையும் சுதந்திரத் தையும் பறிக்கின்றது. தேர்தல் ஆணையமே, இது நியாயமா?’ என துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் ஆணையம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக சந்தேகப்படும் படியான சில வேட்பாளர்களை தேர்வு செய்து அவர்களின் வீடு, அலுவலகத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளது.

மேலும் அவர்களுடைய தெருவிலும் எதிர் வீடுகளிலும் யாருக்கும் தெரியாமல் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ள‌தாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது

SCROLL FOR NEXT