இந்தியா

அனைத்துக் கட்சிக் குழு இன்று காஷ்மீர் பயணம்: ஹுரியத் தலைவர்களுடன் பேச காங். உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை

செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து ஆராய்வதற்காக அனைத்துக் கட்சி குழு இன்று அம்மாநிலத்துக்கு செல்ல உள்ள நிலையில், ஹுரியத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் நேற்று கோரிக்கை வைத்தனர்.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதையடுத்து, காஷ் மீரில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடை பெற்று வருகிறது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் 30 பேர் அடங்கிய குழு 2 நாள் பயணமாக இன்று காஷ்மீர் செல்கிறது. இக்குழுவினர் அங்குள்ள பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று மத்திய அரசு சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது, இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள எம்பிக்களுக்கு காஷ்மீர் நிலவரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “காஷ்மீர் செல்லும் அனைத்துக் கட்சிக் குழு ஹுரியத் மாநாட்டு அமைப்பு தலைவர்களையும் பேச்சுவார்த் தைக்கு அழைக்க வேண்டும். மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கை களை அறிவிக்க வேண்டும்” என்றார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தும் (காங்கிரஸ்) இதே கோரிக்கையை வைத்தார்.

மிளகாய் குண்டுகள் பயன்படுத்த அனுமதி

காஷ்மீரில் கலவரக்காரர்களை கலைக்க பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு கண் பார்வை பறிபோவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உள்துறை அமைச்சக இணை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட 7 உறுப்பினர் குழு, மிளகாய் குண்டுகளை பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அனுமதி வழங்கி உள்ளார். முதல்கட்டமாக 1,000 குண்டுகள் இன்று காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

SCROLL FOR NEXT