இந்தியாவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு வந்த ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்கள் பிரான்ஸில் இருந்துதான் கசிந்துள்ளன. இந்தியாவில் இருந்து அல்ல’’ என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் கப்பல் படையை அதிநவீனமாக்க பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் என்ற கப்பல் கட்டும் நிறுவனத்துடன் மத்திய அரசு தொழில்நுட்ப ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி டிசிஎன்எஸ் தொழில்நுட்பத்துடன், பிரான்ஸின் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மும்பையில் உள்ள மசாகான் அரசு நிறுவனத்தில் முதற்கட்டமாக ஒரு நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக வெள்ளோட்டமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்களை, ஆஸ்தி ரேலியாவின், ‘தி ஆஸ்திரேலியன்’ என்ற பத்திரிகை தனது இணைய தளத்தில் வெளியிட்டது. சுமார் ரூ.24,000 கோடியில் 6 நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் இத்திட்டத்தின் ரகசியங்கள், ‘Resricted Scorpene India’ என்ற தலைப்பில் 22,400 பக்கங்களில் வெளியாயின. ரகசியங்கள் இந்தியாவில் இருந்து கசிந்தனவா, பிரான்ஸில் இருந்து கசிந்தனவா என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த இரு நாடுகளும் உத்தரவிட்டன. இந் நிலையில், ‘‘ஸ்கார்பீன் ரகசியங் கள் இந்தியாவில் இருந்து வெளியாகவில்லை. பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறுவன அலுவலகத் தில் இருந்துதான் கசிந்துள்ளன’’ என்று இந்திய கப்பல்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா நேற்று தெரிவித்தார்.
‘புராஜக்ட் 15பி’ திட்டத்தின் கீழ் 2-வது அதிநவீன கப்பலை தொடங்கி வைத்த பிறகு சுனில் லன்பா கூறியதாவது:
ஸ்கார்பீன் ரகசியங்கள் கசிவு குறித்து இந்தியாவில் உயர்நிலைக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
முதற்கட்ட விசாரணையில் ஸ்கார்பீன் ரகசியங்கள் இந்தியா வில் இருந்து கசியவில்லை. பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறுவனத் தில் இருந்துதான் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதனால் மேற் கொண்டு என்ற செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்.