இந்தியா

பதவி நீட்டிப்பை ஏற்க அட்டர்னி ஜெனரல் மறுப்பு

செய்திப்பிரிவு

பதவி நீட்டிப்பை ஏற்க விருப்பமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2014 ஜூனில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) முகுல் ரோத்கி நியமிக்கப்பட்டார். அவரது 3 ஆண்டு பதவிக் காலம் அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அவரது பதவிக் காலத்தை நீட்டித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கடந்த 3-ம் தேதி அரசாணை வெளியிட்டது.

ஆனால் பதவி நீட்டிப்பை ஏற்க விருப்பமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:

மத்திய அரசுடன் எனக்கு சுமுகமான உறவு நீடிக்கிறது. எனினும் தனியாக வழக்கறிஞர் தொழில் செய்வதையே விரும்புகிறேன். எனது பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டாம் என்று கோரி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்தார்.

டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அவாத் பிஹாரி ரோத்கியின் மகன் முகுல் ரோத்கி. இவர் குஜராத் கலவர வழக்கில் அந்த மாநில அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியுள்ளார். கடந்த 1999-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். தற்போது முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் வாதாடி வருகிறார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு மிகவும் நெருக்கமானவர். டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்த முகுல் ரோத்கி, மத்தியில் அருண் ஜேட்லி சட்ட அமைச்சராக பதவி வகித்தபோது உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார்.

SCROLL FOR NEXT