ஆந்திரபிரதேசத்தில் இருந்து நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி உதய மானது. இதன் 3-ம் ஆண்டு விழாவை அம்மாநில அரசும் மக்களும் நேற்று உற்சாகமாகக் கொண்டாடினர்.
தெலங்கானா அமைப்பு தினத்தை முன்னிட்டு தலைநகர் ஹைதராபாத் விழாக் கோலம் பூண்டிருந்தது. சட்ட மன்றம், தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை, உயர் நீதி மன்றம், சார்மினார் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள், உசைன் சாகர் ஏரி, நெக்லஸ் ரோடு போன்ற முக்கியப் பகுதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு தலைநகரம் ஜொலித்தது.
செகந்திராபாத் அணிவகுப்பு மைதானத்தில் அரசு சார்பில் நேற்று பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரசேகர ராவ் தேசியக்கொடி ஏற்றிவைத்து, வண்ணமயமான பாரம்பரிய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முன்னதாக சட்டப்பேரவை கட்டிடம் அருகில் உள்ள தெலங்கானா தியாகிகள் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.
விழாவில் சந்திரசேகர ராவ் பேசும்போது, “ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா வளமான பகுதியாக இருந்தபோதி லும் முன்னேற்றம் அடைய வில்லை. ஆனால் தனி மாநில மாக உதயமான பிறகு 3 ஆண்டு களில் அனைத்து துறைகளிலும் விரைவான வளர்ச்சி பெற்றுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றும் வகையில் தெலங்கானா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.
2016-17-ம் நிதியாண்டில் தெலங்கானா 17.82 சதவீத வருமான வளர்ச்சி விகிதம் கண்டு, நாட்டில் முதலிடம் பிடித்தது. இம்மாநிலம் வளங்களை உருவாக்குவது மட்டுமின்றி அந்த வளங்களை சமூக நீதிக்காக சமச்சீராக பங்கீடு செய்வதில் முன்மாதிரி மாநிலமாக உள்ளது.
ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கான நலத்திட்டங் களை செயல்படுத்துவதில் நாட்டின் முதன்மை மாநிலமாக உள்ளது. ஆண்டுதோறும் தெலங்கானா அரசு 35 நலத்திட்டங்களில் ரூ.40 ஆயிரம் கோடி செலவிடு கிறது. மாநிலத்தில் 40 லட்சம் பேர் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்ற னர். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி அளிக் கப்படுகிறது.
விரைவில் மின்மிகை மாநில மாக தெலங்கானா உருவெடுக் கும். ராபி பருவத்தில் விவசாயி களுக்கு 24 மணிநேர மின்சார விநியோகம் உறுதிசெய்யப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படும்” என்றார்.
விழாவில் புதிய திட்டங்களை யும் முதல்வர் அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசும் போது, “தனித்து வாழும் பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படும். கருவுற்ற தாய்மார்களுக்கு 3 தவணைகளில் 12 ஆயிரம் வழங் கப்படும். பெண் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இத்தொகை 13 ஆயிரமாக வழங்கப்படும்.
பேறுக்காலத்தில் தாய் மற்றும் குழந்தைக்காக ‘கேசிஆர் கிட்’ வழங்கப்படும். இதில் தாய் மற்றும் குழந்தைக்காக துணிகள், எண்ணெய், சோப்பு, பவுடர், நாப்கின் உள்ளிட்ட 16 பொருட்கள் இடம்பெறும்” என்றார்.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 50 பேருக்கு சந்திரசேகர ராவ் விருதுகள் வழங்கினார்.
மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று இதேபோன்ற விழாக்கள் நடைபெற்றன. அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் இந்த விழாக்களில் பங்கேற்றனர்.