அகமதாபாத் குஜராத்தின் 1,600 கி.மீட்டர் தொலைவு கொண்ட கடல் எல்லையின் பாதுகாப்புப் பணியில் சிறப்பு பயிற்சி பெற்ற 1,000 கமாண்டோ வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த சிறப்பு திட்டம் இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது.
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க கடல் எல்லை பாதுகாப்பில் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குஜராத் கடல் எல்லையில் 1,000 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்காக பல்வேறு படைப் பிரிவுகளில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக குஜராத் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.நந்தா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியபோது, ‘‘1,000 கமாண்டோ வீரர்களும் குஜராத்தின் 1600 கி.மீட்டர் கடல் எல்லையையும் நிலப்பரப்பையும் பாதுகாப்பார்கள், இவர்கள் தவிர கடலோர போலீஸ் நிலையங்கள், மாநில கடலோர காவல் படையும் பலப்படுத்தப்படும்’’ என்றார்.
மாநில காவல் துறை தலைவர் பி.சி. தாக்குர் கூறியபோது, ‘‘இந்தியாவில் முதல்முறையாக குஜராத் மாநிலத்தில் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
குஜராத் கடல் எல்லையில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலில் இருக்கும். முதல் வரிசையில் இந்திய கடற்படை, இரண்டாவது அடுக்கில் கடலோர காவல் படை, மூன்றாவது அடுக்கில் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்’’ என்று தெரிவித்தார்.