இந்தியா

ஆளுநராக கடந்த மாதம் சென்றபோது அனுமதி மறுப்பு: ராம்நாத் கோவிந்தை வரவேற்க காத்திருக்கும் இமாச்சல் ஓய்வு மாளிகை

பிடிஐ

பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரராக அறிவிக்கப்பட் டுள்ள ராம்நாத் கோவிந்த், கடந்த மாதம் சிம்லா வந்தார். இங்கு குடியரசுத் தலைவர் ஓய்வு மாளிகையில் தங்க விரும்பிய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இமாச்ச லபிரதேச தலைநகர் சிம்லாவில் ‘பிரசிடென்சியல் எஸ்டேட்’ உள்ளது. இங்கு குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு ஒருமுறை தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். அப்போது முக்கிய அலுவல்களைக் குடியரசுத் தலைவர் இங்கிருந்து கவனிப்பார் என்பதால், அது தொடர்பான அலுவலகமும் இடம் மாறுவது வழக்கம். பசுமையான மஷோப்ரா மலையில் உள்ள இந்த எஸ்டேட் அதிக பாதுகாப்பு கொண்டதாகும்.

இந்நிலையில் பிஹார் ஆளுநரான ராம்நாத் கோவிந்த், கடந்த மே 28-ம் தேதி தனது குடும்பத்துடன் சிம்லா வந்துள்ளார். சிம்லா மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அப்போது பிரசிடென்சியல் எஸ்டேட்டில் உள்ள கட்டிடத்தில் தங்குவதற்கு ராம்நாத் கோவிந்த் விரும்பினார். ஆனால் தேவையான முன் அனுமதி பெறவில்லை என்று அவரை அனு மதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் அவர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் இந்த ஆண்டு கோடையில் அவரை வரவேற்க ஓய்வு மாளிகை தயாராக இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.

இமாச்சல பிரதேச ஆளுநரின் ஆலோசகர் ஆச்சார்ய தேவ்ரத் கூறும்போது, “இங்கு குடியரசுத் தலைவருக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கல்யானி ஹெலி பேடை ராம்நாத் கோவிந்த் பயன்படுத்தினார். சிம்லா நீர்ப் பிடிப்பு பகுதியாக விளங்கும் வனப் பகுதிக்கு சென்று வாருங்கள் என பரிந்துரை செய்தேன்” என்றார்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்

பிஹார் மாநில ஆளுநராகப் பணியாற்றி வந்த ராம்நாத் கோவிந்த் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ராம்நாத் கோவிந்தின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார். பிஹார் மாநில ஆளுநர் பொறுப்பை மேற்குவங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி கூடுதலாக கவனிப்பார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT