பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிமுக பொதுச்செயலா ளர் சசிகலாவை தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர் சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து சசிகலா, இளவரசி உள்ளிட்ட மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 15-ம் தேதி அடைக்கப்பட்டனர்.
கடந்த வாரம் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, முன் னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, அதிமுக செய்தித் தொடர் பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் சசிகலாவை சந்திப்பதற்காக பெங் களூரு வந்தனர். ஆனால் கர்நாடக சிறைத் துறை அதிகாரிகள் அனுமதி அளிக்காததால் அதிருப்தியுடன் சென்னை திரும்பினர்.
சசிகலாவை அடிக்கடி சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க முடியாது. வாரத்துக்கு 2 அல்லது 3 முறை மட்டுமே தண்டனை கைதிகளை சந்திக்க அனுமதி அளிக்க முடியும் என அதிகாரிகள் உறுதியாகத் தெரிவித்தனர். இதனால் பெங்களூருவில் முகாமிட்டு இருந்த அதிமுகவினரும் வழக்கறிஞர்களும் உறவினர்களும் கடந்த ஒரு வாரமாக சந்திக்காமல் இருந்தனர்.
சசிகலாவுக்கு ஸ்வீட், சால்வை
இந்நிலையில் தமிழக அமைச்சர் கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, காமராஜ் ஆகிய நால்வரும் சசிகலாவை சந்திக்க கர்நாடக சிறைத் துறையில் சிறப்பு அனுமதி கோரினர். சிறை நிர்வாகம் அனுமதி அளித்ததன்பேரில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட நால்வரும் விமானம் மூலமாக நேற்று காலை பெங்களூரு வந்தனர். பிற்பகல் 1.30 மணியளவில் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு தனியார் கார் மூலம் அமைச்சர்கள் வந்தடைந்தனர்.
அப்போது அமைச்சர்கள் செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோருடன் 10-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வந்திருந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு வழங்குவதற்காக 10-க்கும் மேற்பட்ட ஸ்வீட் பாக்ஸ், சால்வை, பழக்கூடைகள் கொண்டு வந்திருந்தனர். இதனை முறையாக பரிசோதித்த பிறகு சசிகலாவை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு மணி நேர ஆலோசனை
பார்வையாளர்கள் அறையில் சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் நால்வரும் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். மேலும் சசிகலா வுக்கு சால்வை அணிவித்து பழக் கூடைகளையும் ஸ்வீட் பாக்ஸ்களை யும் வழங்கி, அமைச்சராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்தனர். அப்போது இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கும் அமைச்சர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிற்பகல் 2.40 வரை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் தமிழக அரசியல் நிலவரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்தது, உள்ளாட்சி தேர்தல் ஆகியவை குறித்து விவாதிக் கப்பட்டது. மேலும் அதிமுகவில் நிலவும் அசாதாரண சூழல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அணி, தீபக்கின் நிலைப்பாடு குறித்து அமைச்சர்களிடம் சசிகலா விசாரித்துள்ளார்.
இதேபோல தேர்தல் ஆணையத் தில் நிலுவையில் உள்ள பொதுச் செயலாளர் நியமன விவகாரம், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரும் மனு, கர்நாடக சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றுவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் திண்டுக் கல் சீனிவாசன், ‘‘மரியாதை நிமித்த மாக சந்தித்தோம். சசிகலா நலமாக உள்ளார். அவரிடம் என்ன பேசினோம் என வெளியே சொல்ல முடியாது'' என்றார். பிறகு அமைச்சர்கள் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
தமிழக அமைச்சர்களின் சந்திப்பு குறித்து சிறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘பெண் கைதிகளுக் கான நீலநிற கரைக் கொண்ட வெள்ளை புடவை அணிந்திருந்த சசிகலாவை கண்டதும் அமைச்சர்கள் கண்கலங்கினர்.
சற்று உடல் மெலிந்து சோர்வாக இருந்த சசிகலாவும் கண் கலங்கினார். சிறிது நேரத்துக்குப் பிறகு, அமைச்சர்களை ஆறுதல் படுத்தினார். நான்கு அமைச்சர்களிடம் பேசிக்கொண்டிருந்த சசிகலா இறுதியாக செங்கோட்டையனை தனியாக அழைத்து, சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்'' என்றனர்.
தமிழக அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் சசிகலாவை சந்தித்துப் பேசியதால் அவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட அரசு வாகனத்தை பயன்படுத்தாமல் தனியார் வாகனத்தையே அமைச்சர் கள் பயன்படுத்தினர்.
முதல்வர் வருவாரா?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார். இதற்காக கடந்த வாரம் அனுமதி கோரியபோது கர்நாடக சிறைத்துறை அதனை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலாவை சந்திக்க அனுமதிக்க கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கடிதம் அளிக்க இருப்பதாகத் தெரிகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி விரைவில் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.