இந்தியா

பாரம்பரிய அடையாளத்துக்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா?- தமிழக அரசு வாதத்தின் மீது உச்ச நீதிமன்றம் கருத்து

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

பாரம்பரிய அடையாளம் உள்ளதால் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்க முடியுமா என தமிழக அரசு வாதத்தின் மீது உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபதே, "ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் கடைபிடிக்கப்படும் பாரம்பரியம்" என வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "குழந்தைத் திருமணங்களை நீதிமன்றம் குற்றம் என அறிவிக்கும் வரை அவை சமூகத்தின் பாரம்பரிய அடையாளமாகவே பார்க்கப்பட்டன. அவ்வாறு பாரம்பரியமாக பார்க்கப்பட்டதாலேயே குழந்தை திருமணத்தை அனுமதிக்க முடியாதல்லவா. குழந்தைத் திருமணத்தின் தீமையை அறிந்து அந்த நடைமுறையை நீதிமன்றம் தடை செய்துள்ளது அல்லவா?" என கருத்து தெரிவித்தனர்.

வழக்கு விசாரணையை வேறு ஒரு கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டும் என சேகர் நபதே கோரிக்கை விடுத்தார். தமிழக அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

வழக்கு பின்னணி:

தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில், அப்போட்டிக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு (2016) மே மாதம் 7-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் பிறப்பிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மத்திய அரசும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அறிக்கை வெளியிட்டது.

ஆனால், மத்திய அரசின் அனுமதிக்கு தடை கோரி இந்திய விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தது.

SCROLL FOR NEXT